புதுடெல்லி: இந்தியாவில் இந்தாண்டு வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் பயிர்கள் அழிக்கப்பட்டு, நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் என்று பாபா வங்கா கூறியது நடக்குமா? என்று பீதி ஏற்பட்டுள்ளது. பல்கேரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. இவர், எதிர்காலத்தில் உலகில் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை முன்கூட்டியே கணித்து கூறிவிட்டு சென்றுள்ளார். இவரின் கணிப்புக்களில் ஒரு சில நடக்கவில்லை என்றாலும், பெரும்பாலானவை உண்மையாகி உள்ளன. இந்தாண்டில் என்ன நடக்கும் என்று பாபா வங்கா கணித்து கூறியுள்ளவற்றில் 2 கணிப்புக்கள் உண்மையாகி உள்ளன.
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று அவர் கணித்திருந்தார். அதன்படியே, இந்தாண்டு பெய்த பலத்த மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். அடுத்ததாக, பெரிய நகரங்கள் வறட்சியால் பாதித்து, குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் என்று கணித்து கூறியுள்ளார். அதேபோல், இங்கிலாந்தின் பல முக்கிய நகரங்கள் வறட்சியால் பாதித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் ஆபத்தான வைரஸ் உருவாகி, உலகளவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும், லட்சக்கணக்கான மக்கள் பலியாவார்கள் என்றும் வங்கா கணித்துள்ளார்.
இதேபோல், 2022ம் ஆண்டில் உலகில் வெப்ப நிலை குறையும். இதன் காரணமாக வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரிக்கும். பசுமையான இந்தியாவை நோக்கி வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து, பயிர்களை தாக்கி சேதப்படுத்தும். இதனால், நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்படும் என்றும் கணித்துள்ளார். இந்த கணிப்புக்கள் எவ்வளவு அளவிற்கு உண்மையாகும் என்பது விரைவில் தெரிய வரும்.