துருக்கி நாட்டின் பிங்கோல் பகுதியில் உள்ள காந்தார் கிராமத்தில் இரண்டு வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி அந்த இடத்தில் சுற்றித் திறிந்த பாம்பினைப் பிடித்து விளையாடி உள்ளார். பாம்போடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை எதிர்பாராத விதமாக, அந்த பாம்பு உதட்டுப் பகுதியில் கடித்துள்ளது. பதிலுக்கு கோபத்தில் அந்தச் சிறுமியும், பாம்பை பற்றிய பயம் அறியாத குழந்தையாக, அந்தப் பாம்பினை கடித்துள்ளார். அதன் பிறகு, அழுகுரலோடு கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமி இருந்த நிலையினை கண்டு அதிர்ந்துள்ளனர். வாயில் 20 இன்ச் அளவுள்ள பாம்பினை, புதிதாக முளைத்த பற்களை கொண்டு கடித்துக் கொண்டிருந்துள்ளார். சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், பாம்பு சிறுமி கடித்ததால் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதன் பின், சிறுமியின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு, அருகில் இருந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
24 மணி நேர மருத்துவக் கண்காணிப்புக்குப் பின், சிறுமி தற்போது நலமுடன் உள்ளார். இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தந்தை, சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர், தன் குழந்தை பாம்பினை தனது பற்களால் இறுக்க கடித்துக் கொண்டிருந்ததை சொன்னதாகவும், அப்போதே அந்த பாம்பு இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ’இறைவன் என் குழந்தையை பாதுகாத்துள்ளார். குறைவான விஷத்தன்மை கொண்ட பாம்பு என்பதால், குழந்தை விரைவில் உடல் நலம் தேறிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, துருக்கி சிறுமியின் வியப்பில் ஆழ்த்தும் வீரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.