கொல்கத்தா: பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.
கலவரம்
இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
பில்கிஸ் பானு
28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார்ச் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
கூட்டு பலாத்காரம்
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு அந்த கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ஒரு வீட்டில் இருந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது.
11 பேருக்கு ஆயுள் தண்டனை
ஆனால், சாட்சிகளை அழித்ததாகவும் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி மும்பைக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
விடுதலை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு வழங்கப்பட்டது.
மஹுவா மொய்த்ரா
இதுகுறித்து கருத்து தெரிவித்த பில்கிஸ் பானு, “ஒரு பெண்ணுக்கான நீதி எப்படி இதுபோல் நிறுத்தப்படும். நம் நாட்டின் நீதிமன்றங்களை நான் நம்பினேன். நம் நாட்டின் அரசியலமைப்பை நம்புனேன். அதிர்ச்சியுடன் வாழ பழகுகிறேன். குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நீதியின் மீதான எனது நம்பிக்கையை உலுக்கியுள்ளது.” என்றார். இது குறித்து ட்விட்டரில் கருத்திட்டுள்ள திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்று இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது.” என்றார்.