மார்ச் 3, 2002 அன்று கோத்ராவுக்குப் பிந்தைய கலவரத்தின்போது தஹோத் மாவட்டத்தில் லிம்கேடா தாலுகாவில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொடூரமான கும்பலால் தாக்கப்பட்டனர். அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டார். அவரின் 2 வயதுக் குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்டது. அவர் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அந்த 11 பேரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சிறை வாசலிலேயே ஆரத்தி எடுத்து, வெற்றித்திழகமிட்டு, இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர். இந்த வீடீயோ இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பில்கிஸ் பானோ தன்னுடைய வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில்,“இவ்வளவு பெரிய அநியாய முடிவை எடுப்பதற்கு முன்பு யாரும் என்னுடைய பாதுகாப்பையும், வாழ்வையும் பற்றி யோசிக்கக்கூட இல்லை. அவர்களின் விடுதலை நீதியின்மீதான என் நம்பிக்கையை அசைத்துவிட்டது. என்னைப் போன்றவர்கள் அச்சமின்றி அமைதியுடன் வாழ குஜராத் அரசு தன் ஒப்புதலைத் திரும்பப் பெறவேண்டும்” என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்படி ஒரு பெண்ணுக்கான நீதி இப்படி முடிய… முடியும்? சுயமரியாதையுடைய தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் எல்லாம் இன்று எங்கே போனார்கள்? பில்கிஸ் பானோ பற்றிய கூட்டு விவாதத்துக்கு பெரிய ஆளுமைகள் எல்லாம் செல்லவில்லையா..? இந்த தேசம் (உங்கள் இல்லாத முதுகுத்தண்டைப்பற்றி) தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், பில்கிஸ் பானோ ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த தேசம் முடிவுசெய்யட்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.