பாட்னா: பிஹாரின் புதிய சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றனர். நேற்று முன்தினம் பிஹார் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 31 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இவர்களில் 16 பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வர்கள். சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற கார்த்திகேய சிங் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடத்தல் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி சரணடைய வேண்டும். ஆனால், அதே நாளில் இவர் சட்ட அமைச்சராக பதவியேற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு பில்டர் ஒருவரை கொலை செய்வதற்காக அவர் கடத்தப்பட்டுள்ளார். இதில் கார்த்திகேய சிங் உட்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தன் மீது போடப்பட்ட பொய்யான வழக்கு என்று கார்த்திகேய சிங் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங் மீது வழக்கு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்றார். இது பிஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
72% அமைச்சர்கள் மீது வழக்கு
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உட்பட 23 அமைச்சர்கள் மீது (72 சதவீதம்) வழக்குகள் உள்ளன. பிஹாரில் உள்ள 32 அமைச்சர்களில், 27 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் மதுபானி தொகுதியைச் சேர்ந்த சமிர் குமார் மஹாசேத் என்ற அமைச்சருக்கு அதிக அளவாக ரூ.24.45 கோடி சொத்து உள்ளது.