பீகார்: டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பீகார் திரும்பினார். அவரை பீகார் முதல்வர் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நிலை பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி, பிரதான கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது.
லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகி இருக்கிறார். பீகாரில் தனது கட்சியின் ஆட்சி அமைந்துள்ளதை தொடர்ந்து, டெல்லியில் இருந்து பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று லாலு பிரசாத் யாதவ் திரும்பினார். இந்நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.