ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2 வாரங்களில் இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை சுமார் 92 நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது.
உலக சுகாதா மையம்
கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது உலகம் முழுவதும் சுமார் 64.4 லட்சம் மனிதர்களை பலிவாங்கியுள்ளது. இதுவரை 59 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி உயிரிழப்பை வெகுவாக குறைத்துள்ள நிலையில், தற்போது இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள்தான் இத்தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
பிரிவுகள்
இந்த வைரஸ் தொற்று இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, காங்கோ மற்றும் மேற்கு ஆப்ரிக்கா என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கிளேட் I மற்றும் கிளேட் II என அழைக்கப்படுகிறது. இது இத்துடன் நின்றுவிடவில்லை. கிளேட் II வைரஸ் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கிளேட் IIக்கு IIa மற்றும் IIb என்ற இரண்டு துணைப்பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கிளேட் IIb என கண்டறியப்பட்டுள்ள வைரஸ் கிளேட் IIa என்பதின் பிரிவு அல்ல.
ஆய்வு
இந்த கிளேட் IIb வைரஸ்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது 1970 இதேபோன்ற வைரஸ் ஒன்றுடன் சில ஒப்புமைகள் இந்த கிளேட் IIb உடன் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை பாதிப்புக்கான காரணம் இந்த மரபணு மாற்றமா அல்லது மனிதர்கள் மூலம் பரவுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. எனினும் இந்த ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. மனிதனின் நோயெதிர்ப்பு திறனுடன் இந்த மரபணு மாறிய வைரஸ்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா
ஆப்ரிக்கா நாடுகளில் இந்த நோய்த்தொற்று கடந்த மே மாதத்தில் தீவிரமாக பரவி வருவது கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே அமெரிக்காவில் இந்த தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் இந்த தொற்று குறித்து ‘அவசர நிலையை’ உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 92 நாடுகளில் 35,000க்கும் அதிகமானோர்களை இந்த குரங்கு அம்மை தொற்று பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.