போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி தரையில் கிடந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் தேசியக்கொடிக்கு பாஜக அவமரியாதை செய்தததாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ள நிலையில் வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சராக உள்ளார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்திலும் சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தேசியக்கொடி ஏற்றினார். இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
தரையில் கிடந்த தேசியக்கொடி
அதாவது கட்சியின் அலுவலக வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழ் தரையில் தேசியக்கொடி கிடந்தது. இந்த தேசியக்கொடியை பத்திரிகையாளர் சந்தீப் மிஸ்ரா எடுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில் ‛‛சுதந்திர தினமான மறுநாள் நான் பாஜகவின் அலுவலகத்துக்கு சென்றபோது வாயிலில் காவலாளிகள், தொண்டர்கள் நின்றனர். இந்த நிலையில் தான் தரையில் தேசியக்கொடி கிடந்தது. இதனை அவர்கள் பார்க்கவில்லை. ஆனால் நான் கவனித்து எடுத்தேன்” என கூறினார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாஜகவினர் மீது விமர்சனம்
கீழே கிடந்த தேசியக்கொடியை எடுத்து பத்திரப்படுத்திய சந்தீப் மிஸ்ராவின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டி வரும் நிலையில் தான் என்ற பத்திரிக்கையாளரை செயலை மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டினர். அதேநேரத்தில் பாஜகவினரை விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது ஹர்கர் திரங்கா என்ற பெயரில் நாடு முழுவதும் பாஜகவினர் பிரசாரம் செய்தனர். மேலும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் 15 வரை பொதுமக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர். இந்நிலையில் தான் பாஜக அலுவலகத்தில் தரையில் தேசியக்கொடி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சி விமர்சனம்
இதபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திக்விஜய் சிங் தனது டுவிட்டரில், ‛‛ பாஜக அலுவலகத்தில் தேசியக் கொடி தரையில் கிடந்தது, பாஜகவினர் அதை எடுக்கவில்லை. பாஜக அலுவலகத்தில் இருந்து இதுபற்றி பேசியுள்ள பத்திரிகையாளர் சந்தீப் மிஸ்ராவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தல் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
மிரட்டல் என புகார்
இதற்கிடையே தான் பத்திரிகையாளர் சந்தீப் மிஸ்ராவின் செயலை பாஜகவினர் விமர்சனம் செய்துள்ளனர். தேசியக்கொடி விஷயம் மூலம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த சந்தீப் மிஸ்ரா முயற்சி செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே தான் பாஜகவினர் சந்தீப் மிஸ்ராவுக்கு எதிராக செயல்பட துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி சந்தீப் மிஸ்ரா கூறுகையில், ‛‛என்னை இப்போது பாஜகவினர் அலுவலகத்துக்குள் நுழை விடமாட்டோம் என மிரட்டுகின்றனர். மேலும் என்னை பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்” என கூறியுள்ளார்.