மும்பை, தோபி தலாவ் பகுதியிலுள்ள மகாராஷ்டிரா செகண்டரி பயிற்சிக் கல்லூரியின் (ஆசிரியர் பயிற்சி) முதல்வராக இருப்பவர் டாக்டர் ஊர்மிளா பார்லிகர். இவர் மாணவ, மாணவிகள் ஒன்றாக இருந்தபோது மாணவிகளின் உடல் உறுப்புகள் குறித்து ஆபாசமாகப் பேசியிருக்கிறார். அதோடு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிவாசி சமுதாய மாணவர்களை ஊர்மிளா மிகவும் இழிவாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கல்லூரி நிகழ்ச்சிகளில் தன் முன் நிற்கும் வரிசையில் உள்ள மாணவர்களில் யாராவது பட்டியலின மாணவர்கள் இருந்தால் அவர்களை தன்னிடமிருந்து விலகி இருக்கும்படி முதல்வர் கேட்டுக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கல்லூரி முதல்வரின் தொடர் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஃபைஷல் ஷேக்கிடம் இது தொடர்பாக முறையிட்டனர். முதல்வரின் அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் குறித்து எடுத்துக்கூறினர்.

இதையடுத்து இந்தப் பிரச்னை குறித்து முறைப்படி மும்பை ஆசாத் மைதானம் போலீஸில் கல்லூரி முதல்வருக்கு எதிராக புகார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் கல்லூரி முதல்வருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட முதல்வரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று உயர் கல்வித்துறையில் புகார் செய்யவும் மாணவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.