புதுச்சேரி: “புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மாநில முதல்வர் ரங்கசாமி, பாஜகவின் உறவை முறித்துக்கொண்டு வெளியேற வேண்டும். ஆளுநர் அலுவலகம் மத்திய அரசின் ஒரு கட்சி அலுவலகமாக செயல்படுவது கண்டனத்துக்குரியது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இதன் நிறைவு நாள் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக தேசியச் செயலர் டி.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து ஏன் மறுக்கப்படுகிறது என்பதை, ஆட்சியாளர்கள் விளக்குவதும் இல்லை. இந்தியாவில் புதுச்சேரி, டெல்லி ஆகிய இரண்டு இடங்களில்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, மாநில அரசுகள் உள்ளபோதும், இரண்டுக்கும் மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநில அந்தஸ்தைப் பெற வேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் நிலைக்குழு அறிக்கைககள் எல்லாம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது நியாயமானது, சரியானது என்று சொல்லியிருக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்கள் அதனை செயல்படுத்தாமல் உள்ளனர். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
புதுச்சேரி ஆளுநர் அலுவலகம், மத்திய அரசின் ஒரு கட்சி அலுவலகம் போல செயல்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசில் எந்தக் கட்சி இருக்கிறதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை, இங்கே நியமன எம்எல்ஏக்களாக நியமித்து, அதன் மூலம் பெரும்பான்மையைக் காட்டி ஜனநாயகத்துக்கு விரோதமாக அரசு அமைவதையும், வன்மையாகக் கண்டிக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் முதல்வர் ரங்கசாமி, பாஜகவின் உறவை முறித்துக்கொண்டு வெளியே வந்து, நான் மக்களுக்காக நிற்பவர் என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். பாஜக புதுச்சேரி மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பாசிச ஆட்சி நிர்வாகத்தை திணிக்க முயற்சிக்கிறது.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடு. ஆனால், ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற பாஜக விரும்புகிறது. நாட்டின் பன்முகத்தன்மை, கொள்கைகள் காப்பாற்றப்பட வேண்டும். இந்தியா கூட்டாட்சி அடிப்படையில் அமையும் நாடு. ஒற்றைத் தன்மை நாடாக மாறக்கூடாது.
மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என அத்தனையையும் ஏவி எதிர்கட்சிகளை பழிவாங்கவும், அச்சுறுத்தவும், ஒடுக்கவும் செய்கிறது. மத்திய அரசை எதிர்த்து கேள்வி எழுப்பினால் அவர்களை தேச விரோதிகள், தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தி, தேசத் துரோக வழக்கைப் போடுகின்றனர்.
பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்படுகிறது. நாட்டு நலனுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்னெடுக்கிறது. இயற்கை வளமும், மனிதவளமும் உள்ளதால், அனைவருக்கும், அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இணைந்து, பாஜகவை வீழ்த்த வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும்” என்று டி,ராஜா கூறியுள்ளார்.