மதுரை; மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயரும் சூழல் ஏற்படும் என்று மதுரையில் தொழிற்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மின் கட்டணம், மின் இணைப்பு பெறுவது உள்ளிட்ட பல்வேறு மின் சேவைகளுக்கான கட்டணம் உயர்த்த அனுமதி கோரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம், மாநில மின் சுமைப்பகுப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு அளித்துள்ளன. அவர்கள் தாக்கல் செய்துள்ள மின் கட்டண, மின் சேவைகளுக்கான உயர்வு மனுக்கள் மீதான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னையில் நடக்கிறது. இதில், கோவையில் நடந்து முடிந்துவிட்டது. இன்று மதுரை தல்லாக்குளம் லட்சுமி சுந்தரம் மண்டபத்தில் இந்த பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் வீரமணி, உறுப்பினர் வெங்கடேசன், இயக்குநர்கள் ஸ்ரீனிவாசன், பிரபாகரன், மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளையும், வழங்கிய மனுக்களையும் பெற்றுக் கொண்டனர்.
மதுரை பெருநகரம், புறநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர், வர்த்தக சங்கங்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 840 மனுக்கள் வழங்கினர். 75 பேர் கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் பேசுகையில், ‘‘கரோனா தொற்று நோய் தாக்கத்திலிருந்து தொழில் வணிக நிறுவனங்கள் தற்போது சற்றே மீண்டு வரும் நேரத்தில் இந்த மின் கட்டண உயர்வு முன் மொழியப்பட்டுள்ளதால், தொழில் வணிக நிறுவனங்கள் குறிப்பாக குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிப்படையும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நடப்பாண்டில் மின்கட்டணத்தை மிக அதிக அளவில் உயர்த்தியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை 6 சதவிகிதம் உயர்த்துவதற்கான பரிந்துரைகளையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
நமது மாநிலத்தில் சுமார் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்களின் சம்பளம் ஆண்டுதோறும் 6 சதவிகிதம் அதிகரிப்பதில்லை; அத்துடன் மின்சார உற்பத்தி செலவு கூட ஆண்டுதோறும் 6 சதவிகிதம் அதிகரிப்பதில்லை என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் யோசனை தமிழ்நாடு மின்சார வாரியம் கைவிட வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்கிறார். மின்சார வாரியத்தின் மின் கட்டண உயர்வால் தமிழகத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு வெளியேறும் சூழல் ஏற்படும்’’ என்றார்.
மடீட்சியா தலைவர் எம்.எஸ்.சம்பத் பேசுகையில், ‘‘சிறு, குறு தொழில் துறை என்பது பாரம்பரியமிக்கது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு வழங்கியிருக்கிறது. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் 45 சதவீதம் வழங்குகிறது. மின் கட்டணஉயர்வு சிறு, குறு தொழில்களை மூடுவதற்கு ஒரு அடிக்கப்படும் மணியாகவே கருதுகிறோம்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு ‘பவர் ஃபேக்டர்’ என்ற ஒரு கட்டுப்பாடு இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது குடிசைகள் மற்றும் குடியிருப்பு வீடுகளை தவிர மற்ற அனைத்து இணைப்புகளுக்கும் ‘பவர் பேக்டர்’ என்பது அமுல்படுத்தப்படுகிறது. இது சரி வர நிர்வகிக்கப்படவில்லை என்றால் ஒன்று முதல் ஒன்றரை சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பவர் ஃபேக்டர் என்றால் என்னவென்றே தெரியாத பல உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘பீக் ஹவர்’ என்று சொல்லப்படும் நெருக்கடியான நேரம் என்ற ஒரு விஷயமானது மின்சார தட்டுப்பாடு அல்லது மின் வெட்டு உள்ள காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும்.
தற்போது மின்தட்டுப்பாடு இல்லாத இந்த காலக்கட்டத்தில் ‘பீக் அவர்’ நெருக்கடி நேர கட்டுப்பாடு ஏன் என்பதற்கு மின்வாரியம் விளக்கம் அளிக்கவில்லை. தற்போது இந்த ‘பீக் அவர்’ நேரத்தில் மின்சாரம் விநியோகம் செய்வதால் மின்சார வாரியத்திற்கு கூடுதல் சுமை எதுவும் கிடையாது. இந்த நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைத்துக் கொள்வதற்கும் மின்வாரியத்திற்கு வசதி இல்லை. அதனால், 24 மணி நேரமும் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு இந்த ‘பீக் அவர்’ முறை பேரிழப்பாகும்’’ என்றார்.
விசைத்தறி தொழிலாளர்கள் பேசுகையில், ‘‘விசைத்தறி தொழில் என்பது கடுமையான பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் கூட இதுபோன்று செங்குத்தான மின் கட்டண உயர்வு இந்த தொழிலில் ஈடுபடும் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும். உற்பத்தி செய்யும் துணிகளுக்கான விலையை நாங்கள் உயர்த்த முடியாது. மின் கட்டண உயர்வு, ஜிஎஸ்டி வரி போன்றவை விசைத்தொழிலை நலிவடைய செய்யும்’’ என்றனர்.