"லண்டனில் வெங்கட் பிரபு நைட் ஷிஃப்ட் வேலை செய்து எங்களை கவனித்துக் கொண்டார்!" – நெகிழும் வைபவ்

தமிழ் சினிமா ஹீரோக்களில் நம் பக்கத்து வீட்டு பையனாக, தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் வைபவ். பேச்சிலும் அதே எளிமை, இனிமை. தெலுங்கில் ஒரு படம், தமிழில் ஒரு படம் (மலேஷியா டு அம்னீஷியா) எனத் தயாரித்தும் இருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஜாலி நட்பு வட்டத்தில் ஒருவரான வைபவ்விடம் பேசினேன்.

“நான் படிச்சது, வளர்ந்தது சென்னையில்தான். சாந்தோம்ல செயின்ட் பீடர்ஸ்லதான் படிச்சேன். மகேஷ் பாபு என் ஸ்கூல் மேட். எனக்கு ஒரு வருஷம் சீனியர் அவர். வெங்கட் பிரபுவும், கார்த்தியுமே எனக்கு சீனியர்ஸ். யுவனும், பிரேம்ஜியும் என் கிளாஸ்மேட்ஸ். ஸ்கூல்ல நடக்கற கல்ச்சுரல்ஸ்ல நானும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். அப்ப தி.நகர்ல இருந்த எங்க வீட்டுல இருந்து, சாந்தோமுக்குத் தினமும் 12பி பஸ்லதான் போயிட்டு வருவேன். என் வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளி யுவன் வீடு இருந்துச்சு. அவர் கார்ல வருவார். கார்ல என்னை வீட்டுல டிராப் பண்றதுக்காகவே யுவனை ஃப்ரெண்ட் புடிச்சிக்கிட்டேன்.

வைபவ்

அதே மாதிரி அவனும் என்னை டிராப் பண்ணுவான். யுவன்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். அப்ப எக்கோ ஆடியோ கேசட் இருந்துச்சு. இளையராஜா சாரோட பாடல்கள் எல்லாம் அந்த கேசட்லதான் வரும். அது யுவன் வீட்டுல டப்பா டப்பாவா நிறைய குவிஞ்சிருக்கும். எக்கோ கேசட்ல புதுப்படப் பாடல் வெளியாகறப்ப முதல் கேசட்டை எனக்குக் கொடுப்பான். ஒண்ணு ரெண்டுதான் கொடுப்பான். நான், அப்படியே பத்து, பதினைஞ்சு கேசட்டுகளை அள்ளிடுவேன். ஒருகட்டத்துல நான் யுவன் வீட்டுக்குப் போனாலே, கேசட் டப்பாக்களை எடுத்து ஒளிச்சு வச்சிடுவான். இந்த மாதிரி நிறைய சாதனைகள், மெமரீஸ் இருக்கு!

பத்தாவதுல செம திருப்புமுனை. நானும், பிரேம்ஜியும் பத்தாவதுல ஃபெயிலாகிட்டோம். அதனால லண்டன் போயிட்டோம். ‘ஏன் லண்டன் போனீங்க?’ன்னு கேட்காதீங்க. எங்க சீனியர் வெங்கட் பிரபு எங்களுக்கு முன்னாடி லண்டன் போயிட்டார். அங்கே அவர் படிச்சிட்டு இருந்தார். அவர் அங்கே இருக்கற தைரியத்துல எங்க வீட்டுல என்னையும் லண்டனுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. ஆறு மாச செலவுக்கான பணம்ன்னு ஒரு தொகையை எங்க வீட்டுல அப்பப்ப கொடுத்து அனுப்புவாங்க. ஆனா, அங்கே ஒரு முறை ஷாப்பிங் போனாலே அந்தத் தொகையில முக்கால்வாசி செலவாகிடும். எங்ககிட்ட காசு இல்லைன்னு வெங்கட் பிரபுகிட்ட சீன் போடுவோம். வெங்கட் எங்களுக்காக அங்க நைட் ஷிஃப்ட் எல்லாம் ஒர்க் பண்ணி ‘வானத்தைப் போல’ விஜயகாந்த் மாதிரி எங்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுத்து பாத்துக்கிட்டார்.

வைபவ்

ஒவ்வொரு படங்களா பண்ணும்போதுதான் எனக்கு சினிமா புரிஞ்சது. ஆரம்பத்துல என் படங்களைப் பார்த்துட்டு நண்பர்கள் பலரும், ‘சூப்பரா பண்ணியிருக்கே’ன்னு பாராட்டுவாங்க. தமிழ் சினிமாவையே நான் புரட்டிப்போட்டதாக எண்ண வெச்சிடுவாங்க. அந்தப் பாராட்டுகளை நிஜம்ன்னு கூட நம்பியிருக்கேன். ஆனா, காலங்கள் போகப்போக ஒரு விஷயம் புரிஞ்சது. யாருமே முகத்துக்கு நேரா, திட்டமாட்டாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். பல இயக்குநர்களோட வேலை செய்த அனுபவங்கள்ல நாம இன்னும் நிறைய உழைக்கணும் அப்படிங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்” என்கிறார் வைபவ்.

நடிகர் வைபவ் அவர்களின் முழுப் பேட்டியையும் இந்த வீடியோவில் காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.