புதுடெல்லி: ராஜஸ்தானில் எஸ்பிஐ கிளையில் இருந்த ரூ.11 கோடி நாணயங்கள் திருடு போனது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 25 இடங்களில் சோதனை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம், கரோலியில் ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இந்த வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் குறித்து கடந்தாண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் மூலமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியின் கையிருப்பு பணம் எண்ணப்பட்டது. அதில், ரூ.2 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மட்டுமே இருந்தன.
ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த ஏப்ரலில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. பெட்டகத்தில் இருந்த நாணயங்கள் காணாமல் போன சம்பவத்தில் 15 முன்னாள் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி, ஜெய்ப்பூர், தவுசா, கரோலி, சவாய் மதோப்பூர், ஆல்வர், உதய்ப்பூர் உள்ளிட்ட 25 இடங்களில் உள்ள முன்னாள் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.