புதுடெல்லி: விமானங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி புதிதாக 9,062 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில், விமான பயணிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என விமான நிறுவனங்களை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, விமான பயணிகள் பயணம் முழுவதும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விமானங்களில் திடீர் சோதனை நடத்தப்படும். யாராவது கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக விமான நிறுவனங்களால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ எச்சரித்துள்ளது.