திருவனந்தபுரம்: நஸ்ரியா மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
ஃபஹத் பாசிலை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் விமான பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
க்யூட் நஸ்ரியா
நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேபோல் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நஸ்ரியா, தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை மயக்கினார். இவரது துடுக்குத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஃபஹத்துடன் காதல் திருமணம்
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நஸ்ரியாவுக்கு, ஃபஹத் பாசிலுடன் காதல் வந்தது. பின்னர் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, தற்போது மீண்டும் தனது சுட்டித்தனமான நடிப்பால் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

நானியுடன் ஜோடி
சமீபத்தில் நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘அண்டே சுந்தராகினி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தெலுங்கில் உருவான இப்படம், தமிழ், மலையாளம் மொழிகளிலும் வெளியானது. நானி ஹீரோவாக நடித்திருந்த ‘அண்டே சுந்தராகினி’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நஸ்ரியா. அதிலும், பாடல்களில் நஸ்ரியா தனது வழக்கமான க்யூட்னஸ்களால், செம்மையாக ஸ்கோர் செய்திருந்தார். இன்னொரு பக்கம் அவரது கணவரும் பான் இந்தியா ஸ்டாருமாகிய ஃபஹத் பாசில், ஆல் ரவுண்டராக அசரடித்து வருகிறார்.

விமானத்தில் மோசமான அனுபவம்
இந்நிலையில், நஸ்ரியா தனக்கு விமான பயணத்தில் நடந்த மோசமான அனுபவத்தை வேதனையுடன் பகிர்ந்துள்ளார். தாய்லாந்து பயணத்தின் போது அந்நாட்டு தாய் ஏர்வேஸ் விமானத்தில் தான் தனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதாவது, “தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்ததாகவும், விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவிகேட்டு பணியாளர்களை அழைத்தேன். ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால், இனி என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் மட்டும் பயணம் செய்யவேமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.