இலங்கையில் சேவைகளில் ஈடுபட்டுள்ள விமானங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி விமான எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தின் அவசியம் பற்றி துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு.நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிற்கு உள்ளே மற்றும் நாட்டிற்கு வெளியே புறப்படும் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் வழங்க முடியாவிட்டால், அந்த எரிபொருளை இறக்குமதி செய்யும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விமான நிலையத்தில் விமான எரிபொருளைப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையை உடனடியாக மாற்றி விமானத் துறையை ஸ்திரப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அமைச்சர் தலைமையில் நேற்று காலை விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இவ் கலந்துரையாடலில் இலங்கையில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சுற்றுலா பருவ காலம் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பமாக உள்ளதாகவும், இதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அதிகளவான விமான சேவைகள் இடம்பெறும் என இந்தக் கலந்துரையாடலில் ,விமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் விமானங்களுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்குவது மிக அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.