கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொலை செய்து நகைகளைத் திருடிவிட்டு, பெங்களூருவில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இம்மாதம் 4-ந் தேதி, சரோஜினி என்ற அந்த 72 வயது மூதாட்டி வாயில் டேப் ஒட்டப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல் உதவியுடன் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அபினேஷ், வசந்த் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அபினேஷ் ஏற்கனவே மூதாட்டியின் வீட்டருகே வசித்துவந்ததும், பின் வேலை கிடைத்து ஓசூருக்கு சென்றபோது வசந்த் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டு, எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கில், அங்கிருந்து சூலூர் வந்து மூதாட்டியை கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இருவரையும் மூதாட்டி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீசார் தனியே வசிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அங்கிருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.