ஹராரே : இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இன்று, ஹராரேயில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது.
ராகுல் எதிர்பார்ப்பு
கொரோனா, காயத்தில் இருந்து மீண்ட லோகேஷ் ராகுல், இரண்டு மாதங்களுக்கு பின் கேப்டனாக அணிக்கு திரும்பினார். இவர், துவக்க வீரராக சாதித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் (97, 13, 58 ரன்), சுப்மன் கில் (63, 43, 98* ரன்) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஆனால் ராகுலின் வருகையால், 3வது இடத்தில் களமிறங்க உள்ள சுப்மன் கில், ஜிம்பாப்வே மண்ணிலும் ரன் மழை பொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கெட் கீப்பர்-பேட்டருக்கான இடத்துக்கு இஷான் கிஷான், சஞ்சு சாம்சனுக்கு இடையே போட்டி நிலவுகிறது. பேட்டிங்கில் தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம். வேகப்பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சகார், அவேஷ் கான் மிரட்ட காத்திருக்கின்றனர். ‘சுழலில்’ குல்தீப் யாதவ், அக்சர் படேல் கூட்டணி விக்கெட் வேட்டை நடத்தலாம்.
சிக்கந்தர் நம்பிக்கை
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை (2-1) கைப்பற்றிய உற்சாகத்தில் ஜிம்பாப்வே அணி உள்ளது. இதில் இரண்டு போட்டியில் வங்கதேச அணி நிர்ணயித்த 304, 291 ரன்னை ‘சேஸ்’ செய்திருப்பது, இந்திய பவுலர்களுக்கு சவாலான விஷயம். இத்தொடரில் 2 சதம் உட்பட 252 ரன் குவித்த சிக்கந்தர் ராஜா, மீண்டும் கைகொடுக்கலாம். பேட்டிங்கில் கேப்டன் ரெஜிஸ் சகாப்வா, இன்னோசன்ட் கயா உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement