புதுடெல்லி: வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல், நிதிஷ் தன் கூட்டணியை மாற்றியிருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கருத்து கூறியது சர்ச்சையை கிளம்பியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவர், பாஜகவின் தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்து விலகிய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீது கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜய்வர்கியா, ‘‘அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். அங்கு ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல் நிதிஷ் இங்கு கூட்டணி மாறியுள்ளார்.’’ எனத் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் விலகி எட்டு நாட்கள் முடிந்துள்ளன. இவர் தற்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வராகி உள்ளார். எனினும், தமது ஆதரவிலிருந்து விலகிய முதல்வர் நிதிஷ் மீது பாஜகவினர் செய்யும் கடுமையான விமர்சனங்கள் நின்றபாடில்லை. இந்தவகையில், அகட்சியின் மூத்த தலைவரான விஜய் வர்கியாவின் கருத்து சர்ச்சையை கிளம்பியுள்ளது.
ஆண் நண்பர்களை மாற்றுவது போல் என நிதிஷை விமர்சித்த பாஜக தலைவர் விஜய் வர்கியா, வெளிநாட்டு பெண்களை விமர்சித்துள்ளார் என புகார்கள் கிளம்பியுள்ளன. பிஹாரில் ஜேடியு மற்றும் ஆர்ஜேடி கட்சியினர் விஜய் வர்கியாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.