வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது

வேலூர்: வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இது பயன்பாட்டிற்கு வருவதற்குள் முட்புதார்கள் சூழ்ந்து காடு போல மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்தது. இங்கிருந்து சரக்குகளை கையாளவும், பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக டெர்மினல் பில்டிங், 800 மீட்டர் ரன்வே, வாகன நிறுத்துமிடம், விமான நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், மின்சார கட்டிட பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது.

இதற்காக விமான நிலையத்தின் நடுப்பகுதியில் இருந்த அப்துல்லாபுரம்-தார்வழி சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக விமான நிலையத்தை சுற்றி புதிய சாலை ரூ.1.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  விரிவாக்கப்பணிக்காக அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தை வாங்க பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மரங்கள், பெரிய சுற்றுச்சுவர் என தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.20 கோடி வழங்க திட்டமதிப்பீடு செய்யும் பணி நடந்தது. ஆனால் அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதே அளவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மாவட்ட அளவில் மறுமதிப்பீடு செய்யும் குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. இதையடுத்து மாநில அளவிலான மறுமதிப்பீட்டு குழு கூட்டம் நடத்தப்பட்டது. விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இறுதிமுடிவு எடுக்கவில்லை. இதனால் விமான நிலையத்தின் மீதமுள்ள கட்டிடப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

எங்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில், விமான நிலைய கட்டுமான பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்குள் விமானம் பறக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விமானம் பறக்கவில்லை. தற்போது மீதமுள்ள கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடங்கிய நிலையில் உள்ளது.
 
இதன்காரணமாக விமான நிலையத்தின் முகப்பு பகுதி உள்பட பல்வேறு இடங்களில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் மாறியுள்ளது. இதனால் ஏற்கனவே இங்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழாகும் நிலை உள்ளது. பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகும் நிலை வேதனையாக உள்ளது.  முக்கியத்துவம் வாய்ந்த வேலூருக்கு விமான நிலையம் கொண்டுவர மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.