மாஸ்கோ:’மக்கள் தொகை குறைந்து வருவதையடுத்து, 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரொக்கப் பரிசு, விருதுடன் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்’ என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில், மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.இதன்படி, 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் பெண்களுக்கு, ‘மதர் ஹீரோயின்’ என்ற விருது வழங்கப்படும். மேலும், 10வது குழந்தையின் முதல் பிறந்த நாளின்போது அந்த தாய்க்கு, 13 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
ஆனால், இதற்கு முதல், ஒன்பது குழந்தைகளும் உயிருடன் இருக்க வேண்டும்.இதைத் தவிர, அதிக குழந்தைகள் பெற்றெடுக்கும் பெண்களுக்கு, மருத்துவம் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், விவாகரத்துக்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது:ரஷ்ய அதிபராக ஜோசப் ஸ்டாலின் இருந்தபோது, 1944ல் இதுபோன்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய வீரர்கள் அதிகளவில் உயிரிழந்தனர். இதனால் மக்கள் தொகை குறைவதை தடுக்க இந்த திட்டத்தை அவர் அறிவித்தார்.அப்போது, 40 ஆயிரம் பெண்களுக்கு இதுபோன்ற விருது, ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.படையின் பலம் குறைந்து வருவதையடுத்து, அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement