தனது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தனது லிவ் -இன் பார்ட்னரின் பிறப்புறப்பை வெட்டியுள்ளார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்.
உத்தரபிரதேசத்திலுள்ள லகிம்பூர் கேரியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாவாகன்ஜ் பகுதியில் 36 வயது பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் குடிக்கு அடிமையாகி தன்னை துன்புறுத்தியதால் கடந்த 2 வருடங்களாக அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு 32 வயது இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரும் அதே வீட்டில் லிவ்ங் டுகெதராக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்த பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் அந்த நபர் தனது 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முற்பட்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து வயலிலிருந்து வீட்டிற்கு வந்த அந்த பெண், அவரை கையும் களவுமாக பிடித்ததில் ஆத்திரமடைந்துள்ளார். தனது மகளை காப்பாற்ற முயன்றபோது அந்த நபர் தன்னுடன் உறவிலிருந்த பெண்ணையும் தாக்கியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெண் நேராக சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்துவந்து அந்த ஆணின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்துவிட்டார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், தனது செயலுக்காக தான் வருத்தப்படவில்லை என்றும், அந்த நபருக்கு நல்ல பாடம் புகட்டவே அப்படி செய்ததாகவும் கூறியுள்ளார். குற்றம் செய்த அந்த நபரின்மீது பாலியல் வன்கொடுமை (376) மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த நபரின் நிலைமை மோசமாக இருப்பதால் அவரை மேற்சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்தது. தனது தாயின் காதலன் மீது எரிச்சலடைந்த 22 வயது பெண் ஒருவர் அவரது பிறப்புறுப்பை வெட்டியெறிந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM