இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்து வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக 8 யூடியூப் சேனல்கள், ஒரு ஃபேஸ்புக் ஐடி, இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021இன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனலும் அடங்கும். இந்த சேனல்களுக்கு 85 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து கடந்த ஓராண்டில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததாக 102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்திய இறையான்மை, தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவை குறித்து தவறான தகவலை வெளியிடும் எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முன்னதாக, கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: இனி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமும் பணத்தை குவிக்கலாம்! இதோ இப்படித்தான்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM