nellai kannan: தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து களம் கண்ட தமிழ் கடல்!

பன்முகம்:
தமிழ் கடல் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலாமானார். தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மிகத்தில் கரை கண்டவராக திகழ்ந்த அவருக்கு மேடை பேச்சாளர், சொற் பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர் என பன்முகங்கள் உண்டு.

அரசியல் முகம்:
பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி மகாபாரதத்தில் கர்ணன் வரை பல ஆளுமைகள் குறித்த நெல்லை கண்ணனின் ஆர்ப்பரிக்கும் பேச்சை யூடியூப்பில் கேட்டு வியக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, நெல்லை கண்ணனின் அரசியல் முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன் வாழ்நாளில் ஆன்மிகம், தமிழ் இலக்கியத்தின் மீது எநத அளவுக்கு பற்று கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு காமராஜர் மீதும், அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மீதும் நெல்லை கண்ணன் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அத்துடன் பெருந்தலைவர் என அவர் மிகுந்த மரியாதையுடன் அழைத்துவந்த காமராஜர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பையும் நெல்லை கண்ணன் பெற்றிருந்தார்.

அதேசமயம் திமுகவையும், அதன் தலைவர் மு.கருணாநிதியையும் ஆரம்ப காலத்தில் கடுமையாக விமர்சித்து வந்த நெல்லை கண்ணனுக்கு 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய சவால் காத்திருந்தது.

கருணாநிதிக்கு எதிராக:
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அந்த தேர்தலை சந்தித்த காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சென்னை சேப்பாக்கமும் ஒன்று. அந்த தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான கருணாநிதி போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும், காங்கிரஸ் சார்பில் அங்கு போட்டியிட பலரும் தயக்கம் தெரிவித்தனர். அப்போது நான் போட்டியிடுகிறேன் என்று கருணாநிதியை எதிர்த்து தைரியமாக தேர்தலில் களம் கண்டவர் நெல்லை கண்ணன்.

அந்த தேர்தலில் கருணாநிதி 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்றாலும், அவருக்கு எதிராக களமிறங்கிய நெல்லை கண்ணன் பெற்ற 10 ஆயிரம் வாக்குகள்தான் அப்போது தமிழக அரசியல் அரங்கில் குறிப்பாக பேசப்பட்டது.

கண்ணன் வீட்டில் சாப்பிட்ட ராகுல்:
1970-களில் தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரே காங்கிரஸ் பேச்சாளராக நெல்லை கண்ணன் திகழ்ந்தார். தமது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி இவர் வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டதுண்டு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் அவர் பாளையங்கோட்டையில் பேசுவதாக இருந்தது. அவர் வரும்வரை பேசுங்கள் என்று கண்ணனை மேடை ஏற்றிவிட்டார்கள். சிவாஜி வருவதற்கு 5 மணி நேரம் தாமதமானது. அதுவரை கண்ணன் பேசிக்கொண்டே இருந்தார். அந்த அளவுக்கு கூட்டத்தைக் கட்டிப்போடுவதில் சாமர்த்தியசாலியாக திகழ்ந்தார்.

மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி தொடங்கி, கேரள மாநில முன்னாள் முதல்வர் ஏ.கே. ஆன்டனி, மேற்கு வங்க மாநில இன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி லரை என கண்ணனின் அரசியல் நட்பு வட்டாரம் மிகவும் பெரியது என்று அவர் மறைந்த இத்தருணத்தில் பெருமையுடன் நினைவுகூருகின்றனர் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.