காவல்துறை என்றாலே கறார், கடுமை என்ற முன் உதாரணங்களே அதிகம் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற காவல்துறையின் அடிப்படை பணிகளுடன், சேவையிலும் அசத்தி வருகின்றனர் கோவையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள். பேரூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பிரவீனா,

மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் அமினா இருவரும், தன்னார்வலர்களுடன் இணைந்து அடையாளம் தெரியாத உடல்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை டி.ஜி.பி சைலேந்திரபாபு, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பிரவீனா கூறுகையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு நான் பேரூர் காவல்நிலையத்தில் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பேரூர் கோயில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்துவிட்டார். உடற்கூராய்வு முடிந்த பிறகு, என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை.

அப்போதுதான் ஜீவசாந்தி அறக்கட்டளையில் இருந்து அழைத்து, அவர்களாக அந்த உடலை அடக்கம் செய்தனர். யார் என்றே தெரியாத ஒருவரை, அவர்களாக வந்து அடக்கம் செய்ததைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் இதுபோன்ற பணிகளில் ஈடுபட விரும்பினேன். என் உயரதிகாரிகளின் அனுமதியுடன் பணிகளை தொடங்கினேன்.
ஒவ்வொரு பகுதியிலும் அடையாளம் தெரியாத உடலைப் பார்த்தால் அழையுங்கள் என்று என்னுடைய எண்ணைக் கொடுத்தேன். அது அப்படியே அதிகரித்து, இப்போது 600 உடல்கள் வரை நல்லடக்கம் செய்திருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் பல மக்கள் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்களது வீட்டிலேயே சமைத்து முடிந்தவரை சாலையில் இருந்த மக்களுக்கு உணவு கொடுத்தோம். கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்யும் பணிக்கு பலரும் தயக்கம் காட்டினர்.

அப்போது விடுப்பு எடுத்து அந்தப் பணியையும் தொடர்ந்தேன். இந்த உலகில் புறக்கணிப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை. எங்களது பணிகளைப் பார்க்கும்போது யாரையும் புறக்கணிக்கக் கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு வர வாய்ப்புள்ளது. அந்த நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.
மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் அமினா கூறுகையில், ”காவல்நிலையத்தில் உடற்கூராய்வு போன்றவற்றை தான் கவனித்து வருகிறேன். அடையாளம் தெரியாத உடல்கள் என்றால் அதற்குக் கூடுதல் கவனம் செலுத்துவோம். சாலையில் ஆதரவற்றவர்களை ஏதாவது காப்பகத்தில் சேர்த்திருப்போம். அவர்களுக்கும் ஏதாவது என்றால் நான்தான் இறுதி காரியங்களை செய்வேன். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

பொதுவாக மருத்துவமனை, உடற்கூராய்வூ என்றால் யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், அதை நான் என் கடமையாக நினைத்து செய்கிறேன். உண்மையில் இதை செய்யும்போது மனதுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. நாம் செய்யும் சின்ன சின்ன நல்ல விஷயங்கள், அடுத்த சந்ததிகளை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கொரோனா காலகட்டத்திலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தோம். மரணம் என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது. இருக்கும்வரை ஏதாவது நல்லது செய்ய வேண்டும். காவல்துறையில் நான் ஒரு கடைநிலை ஊழியர்தான். டி.ஜி.பி சார் தான் எங்களுக்கு எல்லாமே. அவர் என்னை அழைத்து நேரில் வாழ்த்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

‘கஷ்டமான பணி தான். அதையும் சிறப்பாக செய்கிறீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்’ என டி.ஜி.பி சார் கூறினார். அந்த நிமிடம் எனக்கு அழுகை தான் வந்தது. என் கையில் பணம் இல்லை. என்னால் முடிந்த பணிகளை இறுதிவரை தொடர்வேன்” என்றார்.
இரண்டு பெண் காவலர்களுக்கும் திருணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பம், காவல்பணி ஆகியவற்றை கடந்து அடையாளம் தெரியாத உடல்களை தங்களது உறவுகளாக எண்ணி நல்லடக்கம் செய்யும் இவர்களின் சேவை மகத்தானது.