சிவகாசி அருகே உள்ளது ஈஞ்சார் கிராமம். இதே பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகனின் உடன் பிறந்த சகோதரர்களான முக்தீஸ்வரன்,மணிகண்டன்,விநாயகமூர்த்தி ஆகிய மூவரும் அதே பகுதியில் வசித்து வந்தார்கள். இதனிடையே, அண்ணன் தம்பிகளுக்கு இடையே நீண்ட வருடமாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டு காவல்துறை தற்காலிகமாக சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொத்து பிரச்சனை குறித்து பேசுவதற்காக முக்தீஸ்வரன்,மணிகண்டன்,விநாயகமூர்த்தி ஆகியோர் முருகன் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்ப முதல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் அறிவால் மற்றும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் முருகன் என்பவர் பலத்த வெட்டு காயத்துடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் முருகன் மனைவி இந்திரா தேவிக்கும், மாமியார் பெரியத்தாய் அம்மாளுக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. சரமாரி தாக்கிக் கொண்டதில் முக்தீஸ்வரன், மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகியோர் காயமடைந்து மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த திருத்தங்கள் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முருகனின் மூத்த சகோதரர் முக்தீஸ்வரர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விநாயகமூர்த்தி மற்றும் சிலரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பிகள் அரிவாள் வெட்டி கொண்டு மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.