2002..கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும். அதன் பிறகு ஹிந்து, முஸ்லிம்கள் இடையே வெடித்த கலவரங்களும், வன்முறை வெறியாட்டங்களும் அரங்கேறிய நாட்கள் குஜராத் மாநில வரலாற்றில் என்றென்றும் கருப்பு நாட்களே கருதப்படும். மதவெறியின் உச்சத்தின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரகணக்கானோரில் ஒருவர்தான் பில்கிஸ் பானு.
இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை:
அப்போது அவர் 19 லயது இளம்பெண்….‘கர்ப்பமாக இருக்கிறேன் என்னை விட்டு விடுங்கள்’ என்ற பில்கிஸ் பானுவின் அழுகுரல் எல்லாம் அந்த காம கொடூரர்களின் காதில் விழவில்லை. கர்ப்பிணி என்றும் பாராமல் பானுவை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல், அவரது 3 வயது பெண் குழந்தையை அவரின் கண் முன்பே கொடுமையாக கொ்ன்றது.
11 பேருக்கு ஆயுள் தண்டனை:
நாட்டையே உலுக்கிய ஈவுஇரக்கமற்ற இந்த கொடூர சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2008 இல் தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம். நீண்ட நெடிய சட்டப்போராட்டத்துக்கு பின்னர், மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறிய அந்நாளில் அவர்கள் தங்களின் முழு வாழ்க்கையையும் சிறையில் கழிப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் என் மகள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும்’ என்று தன் விருப்பத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார் பில்கிஸ் பானு.
விடுதலை:
ஆனால், பில்கிஸ் பானு வழக்கில் சம்பந்தபட்ட 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் மாநில அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை காலமான 14 வருடங்கள பூர்த்தி செய்தது, வயது,, சிறையில் அவர்களின் நன்நடத்தை, குற்றத்தின்தன்மை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நியாயம் கற்பித்துள்ளது குஜராத் அரசு.
குஜராத் அரசின் இந்த முடிவு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சிறையில் நன்நடத்தையுடன் நடந்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பாலியல் குற்றத்துக்கு ஆளாகும் ஆயுள் தண்டனை கைதிகளை எல்லாம் இனி விடுதலை செய்துவிடலாமா என்ற கேள்வியை குஜராத் மாநில அரசின் தவறான இந்த முடிவு எழுப்பியுள்ளது.
எம்எல்ஏ நற்சான்று:
இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ள 11 பேரின் ஜாதியை குறிப்பிட்டு,, அவங்க ரொம்ப நல்லவங்க… சிறையில் நன்னடத்தையுடன் இருந்தனர் என்று நற்சான்றிதழ் அளித்துள்ளார் குஜராத்தை ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ராவுல்ஜி. பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுப்பி வந்தவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளதுடன், அவர்களின் ஜாதியையும் ஆளும்கட்சி எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளது, அவர்கள் அந்த ஜாதியினர் என்பதால்தான் நன்னடத்தை என்ற பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
இவ்வளவு நல்லவங்க எப்படி ஓர் இளம்பெண்ணிடம்… அதுவும் கர்ப்பிணியிடம் காமகொடூரர்களாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு எம்எல்ஏ ரவுல்ஜிதான் பதில் சொல்ல வேண்டும்.