மும்பை: மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு அப்பாவி; அவரது இமேஜை தேவையில்லாமல் கெடுக்கின்றனர் என்று அமலாக்கத்துறை மீது அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். டெல்லி மருந்து கம்பெனியின் உரிமையாளர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மருந்து கம்பெனி தொழிலதிபரும் சிறையில் இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் மட்டுமல்லாமல் அவர் மனைவி லீனா உட்பட இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுகேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், பல கோடி ரூபாய் அவரிடம் பெற்றதாக அமலாக்கப் பிரிவின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக அமலாக்கப் பிரிவு பல முறை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தினர். மேலும் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த ரூ.7 கோடி மதிப்பிலான பரிசுப்பொருள்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், புதிய திருப்பமாக ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற்றப்பத்திரிகையில், ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் அவரைக் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறது.
இதுகுறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் கூறுகையில், ‘இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடியவில்லை. நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நிரபராதி; அவர் ஒரு அப்பாவி. ஜாக்குலினின் தரப்பைக் கேட்காமல் வழக்குத் தொடுத்து இருப்பது நியாயமற்றது. அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவரது இமேஜை தேவையில்லாமல் கெடுக்கின்றனர்’ என்றார்.