தொடர் விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
பண்டிகை காலம் என்றால் புத்தாடை வாங்குவது, பலகாரம் செய்வது ஆகியவற்றிற்கு ஆகும் செலவை விட மிக அதிகமாக பேருந்து கட்டணத்துக்கு வழங்க வேண்டியதாக உள்ளது. கல்வி, தொழில், வேலைக்காக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் போன்ற வெளி நகரங்களுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புபவர்களின் நிலைமை ஒவ்வொரு பண்டிகையின் போதும் இதுதான்.
இந்த சமயங்களில் பலரும் சொந்த ஊருக்கு செல்ல முனைப்பு காட்டுவதால் இதுதான் சமயம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துகின்றனர். இணையதளங்களில் பட்டவர்த்தனமாக கட்டணத்தை உயர்த்தி விற்பதை அரசு கண்டும் காணாமல் உள்ளது என்பதே மக்களின் குற்றச்சாட்டு.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும் கட்டணம் குறைந்தபாடில்லை. ஆகஸ்ட் 15 சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டும் கட்டணக் கொள்ளை அரங்கேறியது.
இன்று கோகுலாஷ்டமி விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்றும் பல இடங்களில் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட 68 ஆயிரத்து 90 ரூபாய் கூடுதல் கட்டணம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”கடந்த ஆகஸ்ட்15ஆம் தேதி வரை தொடர் விடுமுறை இருந்த காரணத்தால், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில், போக்குவரத்து ஆணையர்கள் முன்னிலையில், போக்குவரத்து ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் மூலம் 953 பேருந்துகளுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அந்த வாகனங்களில் ஆய்வு செய்தபோது, புகார் தெரிவித்த 97 பேருக்கு கட்டணங்களை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு திரும்ப வழங்கப்பட்ட தொகை 68 ஆயிரத்து 90 ரூபாய். இதில் 4 ஆம்னி பேருந்துகள் முறையான பெர்மிட் இல்லாமல் செயல்பட்டதால், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.