சென்னை: மின் சந்தையில், தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), தினமும் சுமார் 10 மில்லியன் யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கான கட்டணத்தில் ரூ.926.11 கோடியை செலுத்தாமல், தமிழக மின் வாரியம் நிலுவையில் வைத்துள்ளது. இதன்காரணமாக, மின்சாரத்தை கொள்முதல் செய்யவும், உபரி மின்சாரத்தை விற்கவும் தமிழக மின் வாரியத்துக்கு, பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், ‘ஒன்றிய அரசின் எரிசக்தித் துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பிராப்தி போர்ட்டல் இணையதளத்தில் மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத் தொகையை வெளியிட முடியும். ஆனால், டான்ஜெட்கோ அதற்கு பதில் அளிக்க வழிவகை இல்லை. நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. அதை நிறுவனங்கள் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதல்ல’ என குறிப்பிட்டுள்ளார்.
மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தமிழக மின் வாரியம் வைத்துள்ள நிலுவைத் தொகையில் ரூ.220 கோடி உடனடியாக செலுத்தப்படும். எஞ்சிய தொகையை வங்கி மூலம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மின் விநியோகத்தில் தடை ஏற்படும் என மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதால், தற்போதைய தினசரி மின் தேவை எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.