ஓராண்டுக்கு முன் எகிப்துக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவர் மாயமானார்.
அவர் என்ன ஆனார் என்பது தெரியாதிருந்த நிலையில், தற்போது திடீரென அவர் பிரான்ஸ் திரும்பியுள்ளார்.
Yann Bourdon (27) என்ற பிரான்ஸ் நாட்டவரான இளைஞர் 2021ஆம் ஆண்டு எகிப்துக்குச் சென்ற நிலையில், 2021, ஆகத்து மாதத்துக்குப் பிறகு அவர் தன் குடும்பத்தாரை தொடர்புகொள்ளவில்லை.
மகனுக்கு என்ன ஆனது என்று புரியாத Bourdonஇன் பெற்றோர், எகிப்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, எந்த பதிலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில், எகிப்து ஜனாதிபதியான Abdel Fattah el-Sissi, ஜூலை மாதம் 22ஆம் திகதி அரசு முறைப்பயணமாக பாரீஸ் வந்தார்.
Copyright AP Photo/Thomas Padilla
அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானைச் சந்திக்கச் செல்லும் வழியில், ’Yann Bourdon எங்கே, ஜனாதிபதி Siss அவர்களே’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் Bourdonஇன் பெற்றோர் சாலையோரமாக நின்ற விடயம் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு Bourdon, கெய்ரோவிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திலிருந்து தன் சகோதரியை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். அதே நாளில், எகிப்து அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் Bourdon பாரீஸ் திரும்புவதாக அறிவித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத சூழலில், இம்மாதம் (ஆகத்து) 10ஆம் திகதி, திடீரென பாரீஸ் வந்தடைந்துள்ளார் Bourdon.
ஆனால், தனக்கு எகிப்தில் என்ன நடந்தது, எப்படி பிரான்ஸ் திரும்பினேன் என்பது குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்க Bourdon மறுத்துவிட்டதால், அவருக்கு என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது.
அவர் எகிப்து பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் அடைக்கப்பட்டிருக்கலாம் என Bourdonஉடைய குடும்பத்தினர் கருதுகிறார்கள்.