பெங்களூரு: “அவர்கள் காந்தியை கொன்றவர்கள், என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?” என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.
குடகு மாவட்டத்தில் தனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அவர் கூறுகையில், “அவர்கள் காந்தியை கொன்றவர்கள், என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். அவரது போட்டோவை வணங்கி, வழிபடுபவர்களிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். “இந்தப் போராட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயத்தை பெற முயற்சிக்கிறார் சித்தராமையா. யாரும் அவரை தாக்கப் போவதில்லை. அவருக்கு முறையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நான் இந்தப் போராட்டத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களை ஆதரிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடகாவில் சுதந்திர கொண்டாட்டத்தின்போது சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சாவர்க்கர் படம் வைக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சித்தராமையா நேற்று குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றார். மடிகேரி அருகே சென்ற போது பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டினர். அவரது வாகனத்தின் மீது முட்டைகளை வீசினர். மேலும் சாவர்க்கர் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்குமாறு முழக்கம் எழுப்பினர்.
இதனால் காங்கிரஸாருக்கும், இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் சித்தராமையாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து குடகு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எம்.ஏ.ஐயப்பா, “இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சித்தராமையாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றது குறிப்பிடத்தக்கது.