சென்னை: நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக நன்மைக்காக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் பணியில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த பொற்காலத்தில், முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும். தேசத்தின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றவும், நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கும் இந்த நன்னாளில் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம்.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: ‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்ற கண்ணனின் உபதேசத்தை மனதில்கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கிருஷ்ணர் அவதரித்ததன் நோக்கமே இந்த உலகத்தில்உள்ள தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்குத்தான். இந்த நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் அறத்தை போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இவ்வுலகில் அவதரித்த கிருஷ்ணனின் பிறந்தநாளில், நாட்டின் தீமைகள் அழிந்துநன்மைகள் பெருக வேண்டும். மக்கள் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருக, நாடும், நாட்டு மக்களும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய இறைவனை வேண்டி,கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: கிருஷ்ணர் அவதரித்ததற்கான நோக்கம், உலகில், அன்பு, அமைதி,மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை பெருக வேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் நிறைவேறி மக்கள் அனைவரும் அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் வாழ்வதை உறுதி செய்ய பாடு படுவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வாழ்வின் பல்வேறு சூழல்களில் ஒவ்வொரு மனிதரும் பின்பற்ற வேண்டிய நன்னெறிகளை கீதா உபதேசத்தில் கிருஷ்ணர் நமக்காக வழங்கியிருக்கிறார். அவற்றைக் கடைபிடித்து அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட நல்வாழ்வினை அமைத்துக் கொள்ள கிருஷ்ண ஜெயந்தி வழிகாட்டட்டும்.
வி.கே.சசிகலா: கிருஷ்ண ஜெயந்தி நாளில், ஒவ்வொருவரும் துரோக சிந்தனைகளை விலக்கி, அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.