கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை குரு பாலஜனாதிபதி ஏற்றி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்ட சுவாமியின் வாகன பவனி நடைபெறுகிறது. வருகிற 29ம் தேதி (திங்கள் கிழமை) 11ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.