திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக அரசுக்கு சொந்தமான ஆட்டோ-டாக்ஸி சேவையை ‘‘கேரளா சவாரி’’ என்ற பெயரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து கேரள தொழிலாளர் நலத் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்தது: புதிய தாராளமயமாக்கல் கொள்கை என்பது நமது பாரம்பரிய தொழில்துறைகளையும், தொழிலாளர்களையும் மிகவும் எதிர்மறையாக பாதிக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், மோட்டார் வாகனப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக சுரண்டப்படாத வருமான ஆதாரத்தை உறுதி செய்யவே தொழிலாளர் துறை “கேரளா சவாரி” திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
முன்னோட்ட அடிப்படையில் இந்த திட்டம் தற்போது திருவனந்தபுரம் நகராட்சியில் மட்டுமே செயல்படுத்தப்படவுள்ளது. முடிவுகளின் அடிப்படையில், இந்த திட்டம் மாநிலம் முழுமைக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
தற்போது செயல்பாட்டில் உள்ள பல ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள் நேரத்துக்கு ஏற்றாற்போல் கட்டணங்களை நிர்ணயித்து பயணிகளை ஏமாற்றி வருகின்றன. ஆனால், கேரளா சவாரி திட்டத்தில் அனைத்து நேரத்திலும் ஒரே விதமான கட்டணமே வசூலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் வி. சிவன்குட்டி கூறினார்.