கொம்பன்கள் என்றுதான் தர்மன்களிடம் பாடம் கற்க போகிறார்கள்.. ’தர்மதுரை’ ஒரு ரிவைண்ட்!

ஒரு நல்ல திரைப்படம் என்பது காலங்கள் கடந்த பிறகும் ஒவ்வொரு முறை அந்தப் படத்தை பார்க்கும் போதும் நமக்குள் ஏதேனும் ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னும் சிறப்பான திரைப்படம் என்றால் நல்ல சிந்தனைகளை தூண்டும் விதமாக அமைந்திருக்க வேண்டும். அந்த வகையில், உணர்வுபூர்வமான, சிந்தனைபூர்வமான காட்சிகளை உடைய படம் தான் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2016ம் ஆண்டு ரிலீஸ் ஆன ’தர்மதுரை’. இந்தப் படம் குறித்து பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பான சில விஷயங்களை தற்போது நினைவு கூர்வோம்.

image

தமிழ் சினிமாவை ஆட்கொண்ட மதுரை:

உண்மையில் தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் வேறு எந்த பகுதியையும் விட மதுரையை மையமாக வைத்தே அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை மண் என்பது மதுரை, தேனி ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்த்ததுதான். சில நேரங்களில் சிவகங்கை, ராமநாதபுரம் வரையிலும் கூட சேர்த்துக் கொள்ளலாம். பாரதிராஜா காலத்தில் வந்த படங்களை காட்டிலும் பருத்திவீரன் படத்தின் வரவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கே எண்ணற்ற படங்கள் மதுரையை சுற்றிய கதைக்களத்தில் வந்துகொண்டே இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள விருமன் வரை.

image

இது ஒருவகையில் கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும் அந்த படங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பின்புலமாக வைத்தே பெரும்பாலான கதைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீரம் குறித்தும், பாசம் குறித்தும், தாய் மாமன் பெருமை குறித்தும் பாடம் எடுத்தே கொன்றுவிடுவார்கள். இதனையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம், வெளிப்படையாகவே ஜாதிப்பெருமையை தம்பட்டம் அடித்துக் கொள்வது வருங்கால தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலை உருவாக்கி விடுகிறது. ஆனால், உண்மையில் அந்த சமுதாயங்கள் (கள்ளர்) குறித்து சொல்லப்பட வேண்டிய கதைகள் இன்னும் சொல்லப்படாமலேயே உள்ளன. அந்த வகையில்தான் கள்ளர் சமுதாயம் குறித்த வாழ்வியலை எப்படி சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து அழகான உணர்வுகளோடு எடுக்கப்பட்ட படம் தான் தர்மதுரை. அந்தப் படத்தில் பேசப்பட்ட முக்கியமான விஷயங்களை இனி பார்க்கலாம்.

image

கள்ளர் பள்ளிகளின் வரலாற்று முக்கியத்துவம்:

தமிழகத்தில் ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சுதந்திரம் அடைவதற்கு முன்பு எப்படி இருந்தார்கள். அவர்கள் எப்படி மெல்ல மெல்ல அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றார்கள் என்பதற்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அந்தவகையில் தான் கள்ளர் சமுதாயமும். பிரிட்டிஷாரால் அவர்கள் அனுபவித்த கொடுமைகளை தாண்டியும் பல கொடுமைகள் அனுபவித்தனர். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டது. அதில் முக்கியமான ஒன்றுதான் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள். அந்த கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் படித்து கல்வியில் உயர்ந்த நிலையை எட்டி நல்ல வேலைகளுக்கு சென்றவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவையெல்லாம் தமிழ் சினிமாவில் காட்டப்படுவதே இல்லை. தர்மதுரை படத்தில் போகிற போக்கில் ஒரு இடத்தில் அழுத்தமாக இதை பதிவு செய்திருப்பார் இயக்குநர்.

image

அன்புசெல்வி ( ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம்) இறந்த பிறகு தர்மனின் (விஜய்சேதுபதி) குடும்பத்தினர் மீது புகார் அளிக்க பரமன் (அன்புசெல்வி தந்தை, எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம்) போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். அப்போது, காவல் அதிகாரியிடம் பரமனி அம்மா பாண்டியம்மா (ராதிகா கதாபாத்திரம்) தன் மகனுக்காக மன்றாடிக் கொண்டிருப்பார். அப்போது, அந்த அதிகாரியிடம் நீங்கள் இருவரும் கள்ளர் பள்ளியில் படித்தீர்கள் தானே என்று சொல்லுவார். இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் அது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தப் பள்ளியில் படித்த தர்மன் தான் படித்து நல்ல மருத்துவராக உருவாகி இருப்பார். இவையெல்லாம் வரலாற்றில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

ஒரே சமுதாயத்திற்குள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்:

சொந்த ஜாதி மீது காட்டமான விமர்சனத்தை இயக்குநர் சீனுராமசாமி வைத்திருப்பார். என்னதான் சொந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் 50 பவுன் நகை, 5 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக தர்மனின் சகோதரர்கள் கேட்பார்கள். அவர்கள் கேட்ட அந்த வரதட்சணையால் தான் கல்யாணம் நின்று போய் அன்புச் செல்வியும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுவிடுவார். ஒரே சமுதாயத்தில் இருக்கிற ஒருவரால் விரும்பினாலும் அவர்களை விட பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதில் சிக்கல்கள் இருப்பதை இயக்குநர் வெளிப்படுத்தி இருப்பார். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு இந்த சிக்கலை இயக்குநர் கையாண்டு இருப்பார். தர்மதுரையை ஒரு சாதிக்கான படம் என்று யாராலும் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான அம்சங்களை கொண்டு கதையை சொல்லி இருப்பார் இயக்குநர்.

image

மருத்துவ துறைக்கு நல்ல போதனைகள்:

image

தர்மதுரை அடிப்படையில் ஒரு மருத்துவத்துறையை பற்றிய திரைப்படம். அதில், மருத்துவக் கல்லூரியில் தர்மனுக்கு பேராசியராக இருந்த டாக்டர் காமராஜ் பேசும் வசனங்கள் முக்கியமானவை. காமராஜ் உணவுத்திட்டத்தின் முக்கியத்துவத்தை பேசியிருப்பார். அவர் மீதான பற்றால் தான் தன்னுடைய பெயரை காம்ராஜ் என மாற்றிக் கொண்டதாக பேராசிரியர் கூறுவார். பணத்திற்கு ஆசைப்படாமல் குறைவான வருமானத்தைக் கொண்டு மக்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று அவர் தன்னுடைய மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவார். அந்த அறிவுரையின்படியே கிராமத்தில் தனது க்ளினிக்கை வைப்பார் தர்மன். கல்லூரியில் ரேக்கிங் கூடாது என வலியுறுத்தி இருப்பார். மருத்துவம் என்பது சேவை என்பதை சொல்லும் படம் தான் தர்மதுரை.

image

திருநங்கைக்கு உரிய முக்கியத்துவம்:

திருநங்கைகள் சமுதாயத்தில் பொதுவாகவே மோசமாக நடத்தப்படுவது வழக்கம். அவர்களை ஒரு கேலிக்குரிய மனிதர்களாகவும், பாலியல் இச்சைக்கான மனிதர்களாகவே பலரும் நடத்துகிறார்கள். அப்படியிருக்கையில், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய க்ளினிக்கில் கம்பவுண்டராக ஒரு திருநங்கையை பணியில் அமர்த்துவார் தர்மன். அந்த கதாபாத்திரத்தில் ஜீவா சுப்ரமணியம் என்ற திருநங்கை நடித்திருப்பார்.

image

வாழ்க்கையில் துன்பம் நிலையானதில்லை:

தர்மதுரை திரைப்படம் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் படமாகவே அமைந்திருக்கும். விஜய்சேதுபதி, தமன்னா கதாபாத்திரங்களுக்கு இடையிலான காட்சிகள் அவ்வளவு உணர்வு பூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும். ஒத்துவராத கணவரை டைவர்ஸ் செய்கிறார் தமன்னா. விஜய் சேதுபதியுடன் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். வாழ்க்கையே தோற்றுப்போனதாக நினைத்த இடத்தில் இருந்து புதிய வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறார் விஜய்சேதுபதி. அருவியில் அவர் குளிக்கும் காட்சி மாற்றத்தின் குறியீடு. இருவரும் லிவ் இன் டூகெதரில் வாழ்கிறார்கள். இந்த சமுதாயத்தில் திருமண உறவில் வாழ்வது தேவையாக உள்ளதென அதே காமராஜ் பேராசியார் மூலம் சொல்கிறார் இயக்குநர்.

”எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் …” என்ற பாடலின் வரிகள் நம்பிக்கையின் விதை. இந்தப் பாடல் வரிகளுக்காக வைரமுத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

image

சின்ன சின்ன விஷயங்கள்:

மருத்துவக் கல்லூரியில் டாங்கேவின் காதலை தர்மன் அழகாக கையாண்டு இருப்பார். மீண்டும் அவர் முதலில் தேடிச் செல்வது டாங்கேவைத்தான். தமன்னாவை இரண்டாவதாகத்தான் தேடிச் செல்வார். மக்க கலங்குதப்பா பாடலில் தப்பாட்டம் குறித்த கருத்தை பதிவு செய்திருப்பார். ‘உங்களுக்கு யார் தப்பாட்டம் என பெயர் வைத்தார்கள். நீங்கள் தான் சரியான ஆட்டம்’ என கூறியிருப்பார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் கிராமத்தில் விவசாயக் கூலியாக இருக்கும். ஆனாலும், சிறு பத்திரிக்கைகளுக்கு அவர் எழுதிக் கொண்டிருப்பார். அந்த ஊரில் சிறிய நூலகம் இருக்கும். இப்படி சின்ன சின்னதாக பல விஷயங்களை குறிப்பிடலாம்.

image

மதுரை, தேனி, சிவகங்கை என்றாலே அரிவாளும், கத்தியுமாக ரவுடியாக, தான் தோன்றித்தனமாக சுற்றித் திரியும் கதாபாத்திரங்களை கொண்ட படங்களை படைப்பதற்கு பதிலாக உணர்வுபூர்வமான காட்சிகளை கொண்ட தர்மதுரை போன்ற படங்களை எடுத்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.