செந்தில் பாலாஜி அடிக்கப் போகும் சிக்ஸர்… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழக முதல்வர்

கடந்த மாதம் 15ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இந்நிலையில் முதல்வர் வருகை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், வரும் 23ஆம் தேதி ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல்வருக்கு மிகவும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதையடுத்து 24ஆம் தேதி கிணத்துகடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார்.

புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார். பின்னர் பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசுகையில், 100 யூனிட் மின்சாரம் எளிய மக்களுக்காக வழங்கப்பட்டது. அதேபோல் தான் மடிக்கணினி, சைக்கிள் ஆகியவையும் முக்கியத் திட்டங்கள். இலவசம் அடித்தட்டு மக்களை கைகோர்த்து அழைத்து செல்கிறது.

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்துவதே தமிழக அரசின் இலக்கு. இலவசத் திட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களே, அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இரட்டை வேஷங்களை தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் என்றார்.

முதல்வர் வருகைக்கு நாங்கள் கொடிகள், பேனர்கள் வைப்பதில்லை. முதல்வருக்காக நாங்கள் போஸ்டர் ஒட்டியதுக்கு அந்த போஸ்டரின் மீது போஸ்டர் ஒட்டுவோம் என சொல்லுவது எப்படி? என கேள்வி எழுப்பினார். போஸ்டர் ஒட்டும் விவகாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் ஒரு கூட்டம் செயல்படுகிறது. அவர்கள் மீது வழக்கு பதியப்படுள்ளது எனக் கூறினார்.

பாஜகவினர் தங்களின் இருப்பைக் காட்ட செயல்படுகின்றனர். இனிமேல் யாராவது கோவை மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது. வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.