சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜுலை மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெறாது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்காரணமாக, செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழ்நாடு அரசு பெற்றது. அதன்படி, போட்டியைச் சிறப்பாக நடத்த ரூ.100 கோடி அரசு சார்பாக ஒதுக்கப்பட்டது.
அதன்படி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் நடைபெற்றது. முன்னதாக சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார். 12 நாள்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்ததாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாட்டு மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாசாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், சுதந்திர தினத்தன்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக ஆட்சியில் இருந்தால் செஸ் போட்டியை இதைவிடச் சிறப்பாகச் செய்திருப்போம். முதல்வர் போட்டோஷூட் நடத்தியதும், விழாவை குடும்பத்தினர் அமர்ந்து பார்ப்பதற்கும்தான் பல கோடி செலவுச் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் பாராட்டு தெரிவிக்கட்டும். நாங்கள் உள்ளதை மட்டும்தான் சொல்ல முடியும். மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டலுக்கு 10 நாள்களுக்கு 30 கோடி ரூபாய் பில் போட்டுள்ளார்கள். இதை வைத்து மிகப்பெரிய ஹோட்டலே கட்டியிருக்கலாம். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது கமிஷன் பெறப்பட்டியிருக்கிறது” என்று பகிர் குற்றச்சாட்டை கிளப்பி இருந்தார்.
இதற்குப் பதிலளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்திருப்பார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் வெறும் 114 கோடி ரூபாய் செலவில் நடத்தி இருக்கிறார்.
ஒரு ரூபாய் செலவுக்கு மூன்று ரூபாய் வேலை நடந்திருக்கிறது. செலவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து நடத்தி இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவு – செலவு கணக்குகளை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், பொதுத்தளத்தில் வைக்க தயார்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதற்கு, “சாப்பாடு செலவு இல்லாமல், 30 கோடி வரை ஓட்டலுக்கு செலவிடப்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசு மற்றும் அமைச்சரின் கடமையாகும். இதற்கு ஏன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள். அப்படி என்றால் ஏதோ இருக்கிறது…” என்று அமைச்சரை மீண்டும் சீண்டியிருக்கிறார் ஜெயக்குமார்.
இதற்கு அமைச்சர் மெய்யநாதன் மீண்டும் பேட்டியில் பதிலளிக்காமல் வரவு செலவு கணக்குகளைப் பொதுவெளியில் வெளியிட்டு செயல் மூலமாக பதில் சொன்னால், பிரச்னை ஓய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த கருத்து மோதலை கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.