அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், அவர் மனைவி மெலினா, மற்றும் ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தனர். அந்த பயணத்தின்போது குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம், அகமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகிய நகரங்களுக்குச் சென்றனர். அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இந்திய வருகையின்போது, உணவு, பாதுகாப்புக்கான செலவுகள் உட்பட, இந்திய அரசு மேற்கொண்ட மொத்த செலவுகளைப் பற்றி அறிந்துகொள்ள மிஷால் பத்தேனா என்பவர் முயற்சித்தார். இதையடுத்து,இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பினார்.
ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமிருந்து அவரால் சரியாக பதிலை பெற முடியவில்லை. இதையடுத்து மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு செய்ததன் விளைவாக அதிகாரிகள் இது பற்றி தகவல் அளித்திருக்கின்றனர்.
அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி, 2020 பிப்ரவரி 24,25 ஆகிய இரண்டு நாள்கள் டிரம்ப் குடும்பத்தினரின் பயணத்தின்போது அவர்களுக்கு பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் , போக்குவரத்து என 36 மணி நேரத்துக்கு தோராயமாக ரூ.38 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.