வெவ்வேறு சுவைகளில் உள்ள உணவுகளை ஒன்றாகக் கலந்து சில உணவுகள் தயாரிக்கப்படும். அப்படித் தயாரிக்கப்படும் உணவுகளின் சுவை நம்முடைய நாடி நரம்புகளைக் கட்டிப்போட்டு விடும். ஆனால் சிலவற்றின் சுவை, `தேனில் ஊறவைத்த மசால் வடை போல’ மாறிவிடும். அப்படி ஒரு வித்தியாசமான கலவை தான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாளின் தொடக்கம் முதல் முடிவு வரை தேநீர் இல்லையெனில் நேரத்தைத் தள்ளவே முடியாது என்ற மனநிலையில் பலர் இருப்பர். டீ இல்லாமல் இருக்க முடியாது என்கிறவர்களும் உண்டு. அத்தகைய மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேநீரிலும் கிரீன் டீ, மசாலா சாய், பட்டர் டீ, பிளாக் டீ எனப் பல வகைகள் உண்டு.
இந்நிலையில், புதிய உணவுகளைத் தேடிச் சென்று பதிவிடும் உணவு பதிவர் கொல்கத்தா டிலைட்ஸ் (@kolkatadelites), ஒரு கடையில் ரசகுல்லாவில் செய்யப்படும் தேநீர் பற்றிப் பதிவிட்டுள்ளார்.
அதில் முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி, டீத்தூளைச் சேர்த்து வடிகட்டி, பரிமாறவிருக்கும் கப்பில் ரசகுல்லாவை நசுக்கிப் போட்டு தேநீரை மேலே ஊற்றிக் கொடுக்கப்படுகிறது.
இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிலர் இதன் சுவையை அறிய ஆவல் கொள்வதாக நேர்மறை கமென்டுகளும், சிலர் `தண்ணீரோடு உப்பையும், மிளகாயும் கலந்து கொடுக்கும் ஒரு காலம் விரைவில் வரும்’ என எதிர்மறை கமென்டுகளையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.
நீங்களே சொல்லுங்கள்… தேநீரில் ரசகுல்லா – இந்த காம்பினேஷன் எப்படியிருக்கும்?