தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த சுங்கத்துறை சூப்பிரண்டு அதிரடி கைது

திருவனந்தபுரம்:

கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் கண்ணூரில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்களில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து விமானங்கள் மூலம் தங்கம் கடத்தப்படும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்ைத அதிரடி சோதனைகள் மூலமாக விமான நிலைய அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தும் வருகிறார்கள். சில நேரங்களில் கடத்தல்காரர்களுக்கு விமான நிலைய ஊழியர்களே துணையாக இருந்து செயல்படும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது.

இதற்கிடையே வேலியேபயிரை மேய்ந்த கதையாக நேற்று முன்தினம் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுக்கு உதவிய சுங்கத்துறை சூப்பிரண்டு ஒருவர் 320 கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் பி.முனியப்பன் (வயது 40). இவரது சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சி ஆகும். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி அதிகாலை 2.15 மணிக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் காசர்கோட்டை சேர்ந்த அப்துல் நசீர் (46), சம்ஜீத் (20) ஆகியோர் கோழிக்கோடு வந்தனர்.

இவர்களிடம் தலா 320 கிராம் வீதம் தங்கம் இருந்தது. இதில் 320 கிராம் தங்கத்திற்கு மட்டும் வரி செலுத்தி அதற்கான அத்தாட்சி ஆவணங்கள் பெறப்பட்டது. ஆனால் மீதமுள்ள 320 கிராம் தங்கத்தை சுங்கத்துறை சூப்பிரண்டு முனியப்பன் பதுக்கி வைத்துக் கொண்டார்.

தங்கத்தை கடத்தி கொண்டு வந்தவர்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ரூ.25 ஆயிரத்திற்காக பதுக்கிய தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியே ஓரிடத்தில் கொண்டு வந்து தருவதாக முனியப்பன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சுங்கத்துறை சூப்பிரண்டு முனியப்பன் தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் கடத்தல்காரர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி மறைத்து வைத்திருந்த 320 கிராம் தங்கம், ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 980 ரொக்க பணம், விலை உயர்ந்த கைக்ெகடிகாரங்கள், இந்தியாவை சேர்ந்த 4 பேரின் பாஸ்போர்ட்டுகள் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முனியப்பனை சுங்கத்துறை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக போலீசார் முனியப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.