கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் பள்ளிகள் அருகில் இயங்கும் மதுக்கடைகள் அகற்றப்படும். சென்னையில் இந்த பணி தொடங்கி உள்ளதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துறை ரீதியாக தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் மதுக்கடை அகற்றும் பணி நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரம் ஆகும் என்பதை கருதி மீண்டும் மடிக்கணினி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் லேப்டாப் கொடுக்காமல் விட்டு சென்றுள்ளனர். அதனையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கையில் உள்ளோம். அரசு பள்ளியில் 1 ம் வகுப்பில் இருந்து 5 ம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
