தமிழக பாஜக தலைவர் போலத்தான் கட்சியினரும் : அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

வருகிற 24-ஆம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் அப்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலர் திமுகவில் இணை உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகர மற்றும் மாவட்ட  காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23 ம் தேதி மாலை கோவை வர உள்ளார். 24 ம் தேதி ஈச்சனாரி பகுதியிலுள்ள தமியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர்,பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைத்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்டங்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அன்று மாலை கிணத்துக்கடவு பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் அப்போது பல்வேறு கட்சியிலிருந்து விலகி முக்கிய பிரமுகர்கள் பலர் திமுக வில் இணைய இருப்பதாகவும் ஒன்றரை லட்சம் பேர் வரவேற்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகும் நிலையில் அவர்களை முதல்வர் காப்பாற்றியதாகவும்  அவர்களுக்கான  இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

தமிழகத்தில் இலவசங்களை நிறுத்த கருத்து சொல்கிறீர்களா என வாய் சவடால் விடுபவர்களை பார்த்து கேட்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அவர்கள் இரட்டை வேடம் போட கூடாது என்றும், தமிழகத்தை பொருத்தவரை அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட இலவச திட்டங்கள் தொடரும் எனவும் குறிப்பாக மின்சாரத்துறையிலும் தொடரும் எனவும் உறுதி பட தெரிவித்தார்.

கோவையில் மேம்பால தூண்களில் திமுக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக நடத்திய போரட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, மற்ற இயக்கங்களை போல் நாங்கள் கொடி கட்டவில்லை,பிளக்ஸ் பேனர் வைக்கவில்லை. வருகிற 23 மாலை முதல்வர் கோவை வர உள்ளதால் ஒட்டப்பட்ட போஸ்டரின் மீது அவர்கள் போஸ்டர் ஒட்ட முயல்கிறார்கள். அக்கட்சியின் தமிழக  தலைவரை போல் தான் மாவட்டத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.

இதேபோல் சட்டத்தை கையிலெடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும் பணி முடிவடைந்த உடன் அங்கு ஓவியங்கள் வர உள்ளதால் தற்போது அங்கு போஸ்டர் ஒட்டுவதில் தவறில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.