திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அரசு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் முருகன். சித்தூர் அரசு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் அழகுமணி. இருவரும் தங்கள் கடைகளில் மது விற்பனை செய்த பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் செலுத்தச் சென்றபோது, இவர்கள் மீது மிளகாய் பொடி தூவி 2 லட்ச ரூபாயை இரண்டு பேர் சேர்ந்து கொள்ளைடித்து சென்றதாக பட்டிவீரன்பட்டி போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
அதில், தாங்கள் ஒரே பைக்கில் சரக்கு விற்பனை பணத்தை வத்தலக்குண்டு வங்கியில் செலுத்தச் சென்றோம். எம்.வாடிப்பட்டி குறுக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் பின் தொடர்ந்த வந்த இளைஞர்கள் 2 பேர் எங்கள் பைக்கின் மீது மோதினர். இதில் 2 பைக்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
அப்போது கீழேவிழுந்துகிடந்த எங்கள் இருவரையும் தூக்குவதுபோல நடித்த இளைஞர்கள், முருகன் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவர் கையில் வைத்திருந்த 2 லட்ச ரூபாயைப் பறித்தனர். தடுக்கமுயன்ற அழகுமணியை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பினர். இச்சம்பவத்தில் மேற்பார்வையாளர் அழகுமணி பைக் பெட்டியில் வைத்து கொண்டு வந்த இரண்டரை லட்ச ரூபாய் கொள்ளையர்களுக்கு தெரியாமல் தப்பியது எனக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகனிடம் பேசினோம். டாஸ்மாக் ஊழியர்கள் புகார் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு சென்றுவிசாரித்தோம். அவர்கள் கூறுவது போல எவ்வித தடமும் அங்கே இல்லை. அவர்கள் பைக்கை பின்தொடர்ந்து இளைஞர்கள் பைக்கில் வந்ததாகக் கூறினர். இதனால் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தோம். ஆனால் அதில் அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் எந்த பைக்கும் பின்தொடரவில்லை. பைக்கை இடித்து கீழே தள்ளியவர்கள் என்ன கலர் உடை அணிந்திருந்தார்கள். அவர்கள் ஓட்டிவந்த வாகனத்தின் பெயர், கலர் என்ன என்பதைக் கூட புகார் அளித்தவர்கள் கூறவில்லை.
இதனால் பொய் புகார் அளிக்கிறார்கள் என்ற சந்தேகத்தில், முருகனிடம் விசாரித்தோம். அப்போது அவர் உள்ளாடையில் 25 ஆயிரம் ரூபாய் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. `இந்தப் பணம் யாருடையது? எதற்காக உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளீர்கள்?’ எனக் கேட்டால் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். அதேவேளையில், கொள்ளை சம்பவம் நடந்ததாகக் கூறுவோரில் ஒருவரான அழகுமணி தன்னுடையை சரக்கு விற்பனைக்கான பணத்தை அப்போது சென்று வங்கியில் செலுத்திவிட்டு வந்துள்ளார். அவரும் முன்னுக்குபின் முரணான தகவல்களைக் கொடுக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த இருவரும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் எனக் கூறிச் சென்றுவிட்டனர்” என்றார். டாஸ்மாக் ஊழியர் முருகனை தொடர்புகொள்ள முயன்றோம் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.