க.சண்முகவடிவேல்
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 156 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை இங்கு அடைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
மேலும் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தங்க வைத்துள்ளனர். இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் 11 பேரிடம், கடந்த மாதம் 20-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள் 13 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த நகைகள், பணம், செல் போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை NIA அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டு சென்றனர். அதற்கு அடுத்த நாள் பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் சிறப்பு முகாமில் உள்ள அந்த குறிப்பிட்ட 11 அகதிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
அமலாக்க துறையினரின் விசாரணையில், அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களை வாங்கியதற்கான பணம் எங்கிருந்து வந்து சேர்ந்தது? அதற்கு முறையாக சரக்கு மற்றும் சேவை வரி (GST)செலுத்தப்பட்டுள்ளதா? என்கிற விவரங்களை கேட்டறிந்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் கையகப்படுத்தப்பட்ட பொருள்களை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதியளித்துவிட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் புறப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சிறப்பு முகாமில் இன்று அதிகாலை முதல் 3 மாநகர காவல் துணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் போதை பொருட்கள், ஆயுதங்கள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர். அதிகாலை 5 மணி முதல் 150-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது விசாரணைக் கைதிகளிடம் இருந்து சுமார் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil