மதுரை; ‘‘மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு 2 ஆண்டுகளில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது’’ என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியாபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பழம் பெருமை வாய்ந்த மருத்துவக் கல்லூரியாகும். 1975-ஆம் ஆண்டு கருணாநிதியால் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூன்றரை ஆண்டு டிப்ளமோ படிப்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
82 -ஆம் ஆண்டு கீழ்பாக்கத்தில் இருந்து மதுரை திருமங்கலத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு மூன்றரை ஆண்டாக இருந்த டிப்ளமோ ஹோமியோயோபதி படிப்பு ஐந்தரை ஆண்டுகளாக்கான பட்டப்படிப்பாக மாற்றப்பட்டது. ஆண்டிற்கு 50 மாணவர்கள் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 300 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். தென்மாவட்ட மக்கள் ஹோமியோபதி சிகிச்சை பெறுவதற்கு இந்த மருத்துவக் கல்லூரி மிகப் பெரிய உதவியாக உள்ளது.
இந்த கல்லூரியையொட்டி நான்கு வழிச்சாலை விரிவாக்கம் செய்த சமயத்தில் சாலை உயர்த்தப்பட்டு மருத்துவக் கல்லூரி தாழ்வான பகுதியாக மாறிவிட்டது. அதனால், மழைக்காலங்களில் கல்லூரி வளாகத்தில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டது. கட்டிடங்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. வகுப்பறைகள், ஆய்வரங்கங்கள், அலுவலக அறைகள் கூட பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக ஆய்வகத்தில் எவ்வித வசதியும் இல்லாத இடத்தில் மாணவர்கள் வகுப்புகளை தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தினர்.
அதனாலே, இந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்திருக்கிறோம். இந்தக் கல்லூரி அருகே உள்ள உள்ளாட்சி அமைப்புகள் இங்கே ஒரு கால்வாய் அமைத்து அருகில் உள்ள ஆற்றில் இணைத்தால் தண்ணீர் தேக்கம் இருக்காது என்றும், அதன்பிறகு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டலாம் என்கின்றனர். மற்றொரு யோசனையாக அருகில் 2 கி.மீ தொலைவில் மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட 6 ஏக்கர் இடத்தில் புதிய கட்டிடம் கட்டி அங்கு மருத்துவக் கல்லூரி இடமாற்றிக் கொள்ளலாம் என்ற யோசனையும் உள்ளது. இந்த இரண்டு கருத்துகளையும் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தியாகராஜர் கல்லூரியில் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு புதிய கால்வாய் கட்டுவதால் மழைநீர் தேக்கம் இல்லாமல் போகுமா என்ற ஆய்வை நடத்த கூறியுள்ளோம்.
10 நாட்களில் அவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு இந்த வசதிகளை ஆய்வு செய்வார்கள். அதன்பிறகு கால்வாய் கட்டினாலும் மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படதான் செய்யும் என்று அவர்கள் கூறினால் மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட 6 ஏக்கர் இடத்திற்கு ஹோமியோபதி கல்லூரி கட்டிடம் கட்டி மாற்றப்படும். 2 ஆண்டுகளில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்” என்றார்.