மும்பை அருகிலுள்ள விராரில் வசிப்பவர் நிஷா (11) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இந்தச் சிறுமி தன்னைவிட அதிக வயதான பெண்களிடம் நட்பு வைத்திருந்தார். ஏழாம் வகுப்பு படிக்கும் நிஷா தனது மொபைல் போனை சரி செய்வதற்காக மாலை 7 மணிக்கு கடைக்குச் சென்றார். கடையில் நிஷாவின் 21 வயது தோழி ஒருவர் அவரை, “அருகில் சென்று வரலாம்… வா!” எனக்கூறி அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு நிஷாவை அழைத்துச் சென்ற அந்தப் பெண், தன்னுடைய ஆண் நண்பர்கள் சிலருக்கு போன்செய்து அவர்களை வரவழைத்திருக்கிறார். அதையடுத்து 20 முதல் 23 வயது வரையிலான மூன்று இளைஞர்கள் அங்கு வந்திருக்கின்றனர். பின்னர் அந்த இளம்பெண் அந்த மூவரையும், “இந்தச் சிறுமியைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!” எனக்கூறி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்யச் சொல்லியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஒரு இளைஞர் அந்தச் சிறுமியை மானபங்கப்படுத்த… இருவர் அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதை அந்தச் சிறுமியின் தோழி அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் அதிகாலைவரை இந்தக் கொடுமை நீடித்திருக்கிறது. பின்னர் சுமார் ஐந்து மணியளவில் அவர்கள் அந்தச் சிறுமியை அவர் வீட்டருகில் விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதற்கிடையில், சிறுமியின் பெற்றோர் அவரைக் காணவில்லை என போலீஸில் புகாரளித்துவிட்டு, தேடியிருக்கின்றனர்.
இந்த நிலையில், வீட்டுக்கு வந்த நிஷா தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து நிஷாவின் தோழி மற்றும் இளைஞர்கள் மூவரைக் கைதுசெய்தனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார். சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்த போலீஸார், கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.