போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலித் மாணவி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட போதிலும், இன்னும் கூட நாட்டில் பல பகுதிகளில் சாதிய கொடூரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அதிலும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கூட சாதிய பாகுபாடுகள் பார்க்கப்படுவது கொடூரத்தின் உச்சம். அப்படியொரு சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் முன் வரிசையில் அமர்ந்ததற்காகத் தலித் மாணவியை அரசுப் பள்ளி ஆசிரியரே மிக மோசமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அந்த மாணவியின் பெற்றோர் தொடங்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் ஆசிரியை குறிப்பிட்ட மாணவியிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதும் தாக்கியதும் உறுதியானது.
முன்வரிசை
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை ஜாக்ரிதி சிங்குக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. சிங்ராலியில் உள்ள பைதான் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி முன் வரிசையில் அமர்ந்துள்ளார். வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியை ஜாக்ரிதி சிங் இதைப் பார்த்ததும் கடும் கோபமடைந்துள்ளார்.
தாக்குதல்
இது தொடர்பாக மாணவி தனது புகாரில் கூறுகையில், “நான் முன்வரிசையில் அமர்ந்து இருப்பதைப் பார்த்த உடனேயே என்னைத் திட்டத் தொடங்கிவிட்டார். எனது சாதியைக் குறிப்பிட்டும் என்னைத் திட்டினார். பின்னர் திடீரென எனது தலையில் அடிக்க தொடங்கினார். ஆசிரியை இப்படி என்னைத் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்ததால், நான் மயக்கம் அடைந்தேன். அடுத்த இரண்டு – மூன்று மணி நேரத்திற்கு நான் அப்படியே தான் இருந்தேன்” என்று கூறப்பட்டு உள்ளது.
கண்ணில் தாக்குதல்
புத்தகத்தைக் கொண்டு மாணவியின் கண்ணிலும் கொடூரமாகத் தாக்கி உள்ளார் அந்த ஆசிரியை! மற்ற மாணவிகளின் முன்னிலையில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. அவர்களும் இந்தப் புகாரில் கையொப்பமிட்டுள்ளனர். அதன் பின்னரே மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்து போலீசார் வழக்குப்பதிவைச் செய்துள்ளனர்.
விளக்கம்
இது தொடர்பாக மாஜிஸ்திரேட் ராஜீவ் ரஞ்சன் மீரா கூறுகையில், “மாணவியின் புகாரைத் தொடர்ந்து நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐபிசி மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தோம். ஆசிரியை இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். விரைவில் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க உள்ளோம்” என்றார்.