காதலுக்காக எதையும் செய்யத் துணியும் எண்ணம் எப்போதும் அனைவருக்கும் இருக்கும். அப்படி துணிந்து செய்யும் செயல்களில் ஒரு சிலர் சிக்கலில் சிக்கும் சூழலும் ஏற்படும். அப்படியான சூழலில்தால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்புர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான நபர் சையிஃப் அலி. இவர் தனது காதலியை பார்க்கச் சென்று போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான காரணம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பாய் கூறியதாவது:-
“சையிஃப் அலிக்கு புதிய வேலை கிடைத்திருப்பதால் அவரது வீட்டை விட்டு வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் புறப்படுவதற்கு முன்பு மெஹ்மத்புர் கிராமத்தில் உள்ள காதலியை சந்திக்க எண்ணியிருக்கிறார்.
ஆனால் காதலியின் கிராமத்தில் இருப்பவர்கள் சையிஃப் அலிக்கு நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு தெரியாமல் சென்று பார்த்துவிட வேண்டும் என திட்டமிட்டு பெண்கள் அணியும் புர்காவால் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டிருக்கிறார் சையிஃப். அதன்படி புர்கா அணிந்து காதலியின் கிராமத்துக்கு சென்ற சையிஃபின் உடல் மொழியில் மாற்றம் இருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், புர்காவில் இருந்து முகத்தை தெரிவிக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.
ஊர் மக்களிடம் வசமாக சிக்கியதால் வேறு வழியின்றி புர்கா உடையை விலக்கியதில் சையிஃபின் உண்மை முகம் தெரிய வரவே, அவரை பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனையடுத்து பொது மக்கள் மத்தியில் அமைதியை கெடுக்கும் விதமாக செயல்பட்டதாக சையிஃபை கைது செய்து வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புர்கா அணிந்து வந்த சையிஃபை காதலியின் கிராம மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தது வைரலாகியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
