சென்னை : கடந்த 2004 முதல் சென்னை தினம் ஆகஸ்ட் 22ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பெருமைகளை தனக்குள்ளே கொண்டுள்ள சென்னைக்கு இந்த தினம் மிகவும் அவசியமானதாக உள்ளது.
சினிமாவின் தலைநகராகவும் விளங்கும் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினக் கொண்டாட்டத்தையொட்டி கலைநிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என களைக்கட்டி வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டும் சென்னை தினத்தையொட்டி இரண்டு தினங்கள் சிறப்பான நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை தினம்
கடந்த 1639ம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியினரால் உருவாக்கப்பட்டது சென்னை. இந்த தினத்தை கொண்டாடும்வகையில் கடந்த 2004 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்ற அடைமொழியுடன் சிறப்பாக தலைநிமிர்ந்து நிற்கிறது சென்னை.

கனவு நகரம் சென்னை
கனவுகளின் தொழிற்சாலையாக காணப்படும் சினிமாவின் கனவு நகரமாக காணப்படுகிறது இருக்கிறது. மஞ்சப்பையோடு சென்னையை நோக்கி பயணமானவர்கள் பலரின் வாழ்க்கையை சிறப்பாக்கிய பெருமை சென்னைக்கு உண்டு. அந்த வகையில் பலருடைய வாழ்க்கையை மாற்றிய சென்னை, பழைய காலத்தில் எப்படி இருந்தது என்பதை நமது கண்முன்னே பல படங்கள் கொண்டு வந்தன.

மதராசப்பட்டினம் படம்
ஆனால் அந்தப் படங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படம், சென்னை குறித்த சிறப்பான பிம்பத்தை ரசிகர்களுக்கு கடத்தியது. ஒரு காலக்கட்டம் இருந்தது கூவத்தில் படகு சவாரி நடந்தது என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் அது எப்படி இருந்திருக்கும் என்று எக்கத்துடன் நாமெல்லாம் கற்பனை செய்திருப்போம்.

டிராம்ஸ் வண்டி
ஆனால் இவற்றையெல்லாம் நம் கண்முன்னே கொண்டுவந்த பெருமை மதராசப்பட்டினம் படத்திற்கு உண்டு. மேலும் ட்ராம்போன் அந்தக் காலத்தில் பயணத்திற்கு சிறப்பாக பயன்பட்ட டிராம்ஸ் போன்றவற்றையும் இந்தப் படத்தில் நாம் பார்க்க முடிந்தது. அந்த காலத்து மனிதர்களின் நடை, உடை பாவனைகளையும் இந்தப் படத்தின்மூலம் ஏஎல் விஜய் சிறப்பாக கொடுத்திருந்தார்.

மனிதர்களின் உணர்வுகள்
தொடர்ந்து அந்த கால மனிதர்களின் உணர்வுகள், நாட்டுப்பற்று உள்ளிட்டவையும் மதராசப்பட்டினம் படம் மூலம் நமக்கெல்லாம் கிடைத்தது. இந்தக் காலத்தில் நாம் எல்லோரும் அனைத்தையும் ஜஸ்ட் லைக் தட் கடந்துப் போகிறோம். ஆனால் அந்தக் காலத்தில் மனிதர்கள் தங்களுடைய மற்றும் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பு கொடுத்து செயல்பட்டதும் இந்தப் படம் நமக்கு கொடுத்த முக்கியமான விஷயம்.

ஆர்யாவின் முழுமையான நடிப்பு
இதையெல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், இந்தப் படத்தில் காதலுக்கு மொழி, இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதையும் ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் சிறப்பாக வெளிப்படுத்தினர். ஆர்யா இந்தப் படத்தில்தான் தன்னை தன்னுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தினார்.

நாயகி எமி ஜாக்சன்
இதேபோல வெளிநாட்டிலிருந்த வந்து இந்தப் படத்தில் நடித்த எமி ஜாக்சன், அந்தக் கேரக்டராகவே மாறி, அனைவரையும் கவர்ந்தார். இந்த ஒரு படத்தோடு தன்னுடைய நாட்டிற்கே சென்றுவிடுவார் என்ற கருத்தையெல்லாம் உடைக்க அவருக்கு இந்தப் படம் போதுமானதாக இருந்தது.

இசை அசுரன் ஜிவி பிரகாஷ்
படத்தின் இசைக் குறித்து கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்தின்மூலமாகத்தான் இசை அசுரனாக மாறியிருக்க வேண்டும். அந்த அளவிற்கு அழகான காதலை இசை மூலம் நமக்கெல்லாம் கொடுத்துள்ளார். பூக்கள் பூக்கும் தருணம் பாடல் ஒன்றே அவரது பெருமையை பேசுவதற்கு போதும்.

சென்னை தினக் கொண்டாட்டம்
சென்னை தினத்தை நாமெல்லாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் சென்னை குறித்த எந்த விஷயமும் தெரியாமலேயே ஏதோ மற்றவர்கள் கொண்டாடுகிறார்களே என்று இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் சென்னை குறித்த பல விஷயங்களை நாம் தெரிந்துக் கொண்டு சென்னையை கொண்டாட வேண்டும்.

சென்னையின் பெருமை
சென்னையின் அனைத்து அம்சங்களையும் அனுபவித்துக் கொண்டே, ஊராய்யா இது, மனுஷன் இருப்பானா என்று வெறுமனே கூறாமல் இந்த ஊரின் பழம்பெருமையை நாம் அறிந்துக் கொள்ள மதராசப்பட்டினம் போன்ற சில படங்கள் நமக்கு உதவலாம். அந்த வகையில் இதுபோன்ற முழுமையான ஒரு படத்தை கொடுத்த ஏஎல் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.